Published : 14 Jan 2025 02:02 AM
Last Updated : 14 Jan 2025 02:02 AM

சேலம் தலைவாசலில் ரூ.564 கோடியில் கால்நடை அறிவியல் உயர் ஆராய்ச்சி நிலையம்: முதல்வர் காணொலி மூலம் திறப்பு

சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்ரோடு பகுதியில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ரூ.564 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை, விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், மீனவர் நலத் துறை சார்பில், சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்ரோடு பகுதியில் 1102.25 ஏக்கரில் ரூ.564.44 கோடியில் கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நிர்வாக கட்டிடம், நுழைவுவாயில் வளைவுகள், விருந்தினர் விடுதி மற்றும் 9 வளாகங்கள், அதை சார்ந்த 126 கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

இங்கு உள்ள கால்நடை பண்ணை வளாகத்தில் நாட்டின மாடுகள் பிரிவு, வெள்ளாடுகள் பிரிவு, செம்மறி ஆடுகள் பிரிவு, நாட்டு கோழியின பிரிவுகள், நவீன குஞ்சு பொரிப்பகம், கோழி தீவன உற்பத்தி ஆலை ஆகியவை உள்ளன. மீன்வளர்ப்பு செயல்முறை வளாகத்தில் மறுசுழற்சி முறையில் தீவிர மீன்குஞ்சுகள் உற்பத்தி பிரிவு, அலங்கார மீன் வளர்ப்பு பிரிவு, மீன் கழிவுகளை பயன்படுத்தி காய்கறி உற்பத்தி செய்யும் பிரிவு ஆகியவை உள்ளன.

மேலும், நிர்வாக கட்டிடம், வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வகங்கள், மாணவ, மாணவிகளுக்கான விடுதியுடன் கூடிய முதுநிலை கல்வி மையம், நவீன பயிற்சி வளாகம், ஒருங்கிணைந்த மாதிரி கால்நடை பண்ணைகள், கால்நடை மருத்துவ அலுவலர்கள் விடுதி, ஆராய்ச்சியாளர்கள், வெளிநாட்டு மாணவர்கள் விடுதி, பசுந்தீவன ஆராய்ச்சி வளாகம், மக்கள் கலந்துரையாடும் பகுதி, இறைச்சி கூடம், பதப்படுத்துதல் வளாகம் ஆகியவையும் உள்ளன.

நபார்டு வங்கி மூலம் ரூ.447.05 கோடி கடனுதவி பெறப்பட்டு, இந்த ஆராய்ச்சி நிலையத்துக்கான கட்டமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சி நிலையம் மூலம் ஆண்டுதோறும் சுமார் 70 உயர்தர நாட்டின பசுக்கள், 500-க்கும் மேற்பட்ட மேம்படுத்தப்பட்ட செம்மறி ஆடு மற்றும் வெள்ளாட்டு குட்டிகள், 500 வெண்பன்றி குட்டிகள், 20 லட்சம் நாட்டுக்கோழி குஞ்சுகள் மற்றும் 20 லட்சம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் குறைந்த செலவில் தரமான பால், முட்டை, இறைச்சி பொருட்களை உற்பத்தி செய்ய இயலும். இங்கு அளிக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் ஆண்டுதோறும் 3,000 இளைஞர்களுக்கு பயிற்சி, வேலைவாய்ப்பும் கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x