Published : 13 Jan 2025 05:36 PM
Last Updated : 13 Jan 2025 05:36 PM
கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே லால் பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்ட மாநாடு நேற்று முன்தினம் இரவு நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் முஹமது ஜகரிய்யா தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் அப்துல் ரஹ்மான், தமிழ்நாடு மாநில கௌரவ ஆலோசகர் மருத்துவர் அப்துஸ்ஸமது, அனீசுர் ரஹ்மான், மஸ்ஹீது அஹ்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், துணை பொதுச் செயலாளருமான கனிமொழி எம்.பி, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, தேசிய அமைப்பு செயலாளர் முஹம்மது பஷீர் எம்.பி, தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் நவாஸ்கனி எம்.பி, விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் காதர் மொய்தீன் பேசு கையில், “முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழ் மொழி சிறக்க அரும்பாடு பட்டார். அதன் அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வர், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிந்து வெளி நாகரிகம் தமிழ்நாட்டில் இருந்து தான் சென்றது.
தற்போது அந்த மொழி புரியவில்லை. அந்த மொழியை கண்டறிந்து கூறுபவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசாக தருவதாக அறிவித்துள்ளார். அதாவது 90 கோடியாகும். தமிழ்நாட்டின் நாகரிகம் தான் உலகம் முழுவதும் சென்றது. லால்பேட்டை மதரஸாக்களுக்கு தான் இந்த மொழியை கண்டறியும் ஆற்றல் உள்ளது. ஆகவே நாம் அந்த பரிசை பெறுவோம்” என்றார்.
கனிமொழி எம்.பி பேசுகையில், “திமுகவுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் இருக்கக்கூடிய அந்த உறவு இன்று நேற்று உருவானது அல்ல. அது தந்தை பெரியார் காலத்திலே உள்ளது. இஸ்லாமிய மதத்திற்கு மாறி இருக்கக்கூடிய சகோதரர்களும் சகோதரிகளும் இந்து மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு சென்றபோது தங்களுடைய முதுகிலே இருக்கக்கூடிய அந்த சாதி என்ற அடையாளத்தை தூக்கி எறிந்துவிட்டு சென்றார்கள். எந்த சாதியையும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் தன் வாழ்நாள் எல்லாம் போராடினாரோ, அந்த பெரியாரைப் பற்றி சிலர் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த பெயரைச் சொல்லக் கூட தகுதி இல்லாதவர்கள் விமர்சிக்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் இஸ்லாமிய குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஸ்காலர்ஷிப்பை நிறுத்தினார்கள்.
ஆனால் நம்முடைய முதல்வர், நிறுத்தட்டும், நான் தருகிறேன் அந்த உதவித் தொகையை என்று, புதுமைப் பெண் திட்டத்தை அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு கொண்டு வந்தார்” என்றார்.காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட மாநாட்டில் கனிமொழி எம்.பி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...