Last Updated : 13 Jan, 2025 02:57 PM

55  

Published : 13 Jan 2025 02:57 PM
Last Updated : 13 Jan 2025 02:57 PM

“பொங்கல் பண்டிகையின் 'ஆன்மா' ஆன்மிகம்; அதை அகற்ற முடியாது” - வானதி சீனிவாசன்

வானிதி சீனிவாசன் | கோப்புப்படம்

கோவை: “பொங்கல் பண்டிகையின் 'ஆன்மா' ஆன்மிகம். இந்த ஆன்மாவை அகற்றிவிட்டு, பொங்கல் பண்டிகையின் முக்கிய நோக்கத்தை சிதைக்க அதிகார ஆணவத்தோடு, முயற்சிகள் நடக்கின்றன. சூரியனை வழிபடாமல் வெறுமனே பொங்கல் வைத்து சாப்பிட்டால், அது பொங்கல் பண்டிகையாகாது. எத்தனை திசைதிருப்பல்கள், அழிச்சாட்டியங்கள் நடந்தாலும் பொங்கல் பண்டிகையின் ஆன்மாவான ஆன்மிகத்தை அகற்ற முடியாது.” என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்தியா என்பது பண்டிகைகளின் நாடு. பண்டிகைகள், கொண்டாட்டங்கள் இல்லாத மாதங்களே இல்லை. மார்கழி கடைசியில் வரும் 'போகி', தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படும் 'பொங்கல் திருநாள்', அடுத்த நாள், 'மாட்டுப் பொங்கல்', அதற்கு மறுநாள், 'காணும் பொங்கல்' என நான்கு நாட்கள் தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடும் பண்டிகையே பொங்கல்.

சுகாதாரம் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை கரோனா காலகட்டத்தில் நாம் உணர்ந்தோம். 'தூய்மை' என்பது மக்களின் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டது. 'தூய்மை' இல்லாவிட்டால் 'ஆரோக்கியம்' கெட்டுவிடும். அதனால்தான், தூய்மைக்காகவே ஒரு பண்டிகையை நம் இந்து தமிழர் மரபில் கொண்டாடுகிறோம். தூய்மையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக 2014-ம் ஆண்டில் பிரதமர் மோடி 'தூய்மை இந்தியா' திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் பெரும் வெற்றி அடைந்துள்ளது.

'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' என்பது இன்று உலகளாவிய பிரச்னையாக மாறியிருக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டால், பருவநிலை மாற்றம் ஏற்பட்டு, 'அதிக மழை, அதிக வறட்சி' என மக்களுக்கு பெரும் துயரத்தில் ஆழ்த்தி வருகிறது. பாலைவனப் பகுதிகளில் மழை கொட்டுகிறது. குளிர் பிரதேசங்களில் வெயில் வாட்டுகிறது அதனால், உலகெங்கும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தூய்மை, நன்றி தெரிவித்தல், அறுவடை திருநாள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவைதான் பொங்கல் பண்டிகையின் அடிப்படை தத்துவம். அனைத்தையும் கடவுளாகப் பார்ப்பது நம் இந்து ஞான மரபு. இங்கே கல்லும், கடலும், காடும், மலையும், செடியும், கொடியும், மண்ணும், விண்ணும் அனைத்தும் தெய்வம். அதனால்தான் மனிதன் தனக்கு உதவும் சூரியன், கால்நடைகள் என அனைத்தையும் கடவுளாக நினைத்து பொங்கல் திருநாளில் வழிபடுகிறான்.

பொங்கல் பண்டிகையின் 'ஆன்மா' ஆன்மிகம். இந்த ஆன்மாவை அகற்றிவிட்டு, பொங்கல் பண்டிகையின் முக்கிய நோக்கத்தை சிதைக்க அதிகார ஆணவத்தோடு, முயற்சிகள் நடக்கின்றன. சூரியனை வழிபடாமல் வெறுமனே பொங்கல் வைத்து சாப்பிட்டால், அது பொங்கல் பண்டிகையாகாது. எத்தனை திசைதிருப்பல்கள், அழிச்சாட்டியங்கள் நடந்தாலும் பொங்கல் பண்டிகையின் ஆன்மாவான ஆன்மிகத்தை அகற்ற முடியாது.

பொங்கல் திருநாளை குடும்பத்தினர் உறவினர்கள், நண்பர்களுடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்வோம். 'தை பிறந்தால் வழி பிறக்கும்'. துன்பங்கள் விலகி, அனைவரது வாழ்விலும் இன்பம் பெருக, அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள், என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x