Published : 13 Jan 2025 12:21 PM
Last Updated : 13 Jan 2025 12:21 PM
சென்னை: பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, செல்வப்பெருந்தகை, வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): தமிழ்நாட்டில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மற்ற விழாக்களை விட பொங்கல் பண்டிகைக்கென தனிச் சிறப்பு உண்டு. தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.
‘உழவே தலை” என உழைக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நாம். மண்ணையே குணத்தால் பிரித்து நிலத்தைப் போற்றிய மக்கள் நம் முன்னோர்கள். மனிதன் மட்டுமல்ல, மற்ற உயிரினத்தையும் தன்னோடு இணைத்து வாழ்ந்த சமூகம் நம்முடையது. இனம், மண், மக்கள், விளைச்சல், உணவு இவை அனைத்துக்கும் சேர்த்துக் கொண்டாடும் ஒற்றை விழாதான் பொங்கல் பெருவிழா. வருகிற பொங்கல் திருநாளை தமிழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி, அனைத்து உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவ வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்) : உலகெங்கும் வாழ்ந்து வரும் தமிழ் சமூகம் உழைப்பைப் போற்றும் உன்னத திருநாளாக தை முதல் நாளை வழி, வழியாக கொண்டாடி வருகிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்துறை தமிழறிஞர் ஒன்று கூடி, “தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு” என ஆய்ந்தறிந்து அறிவித்ததை ஏற்று, தமிழ் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகிறது.
இருநூறு ஆண்டுகள் தொடர்ந்த நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முன்னோர்கள் வளர்த்து வழங்கிய “வேற்றுமையில் ஒற்றுமை” நல் மரபையும், மதச்சார்பற்ற பண்பையும் அடித்தளமாக கொண்டு இயங்கி வரும் அரசியலமைப்பு சட்டத்தை சிதைத்து, அழித்தொழித்து விட்டு, அந்த இடத்தில், வழக்கொழிந்து போகும் “மனுதர்ம” விதிமுறைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த ஆர்எஸ்எஸ் பரிவார் கும்பல்கள் வெறி பிடித்து அலைகின்றன. சமய வேறுபாடுகளையும், சனாதனக் கருத்தியலால் கட்டமைக்கப்பட்ட படிநிலை சாதிய சமூக வேறுபாடுகளையும் பயன்படுத்தி, மதவெறி ஆதிக்க சக்திகள் அரசியல் அதிகாரத்தில் தொடரும் பேராபத்தை உணர்ந்து, அதனை அதிகாரத்திலிருந்தும், சமூக வாழ்வில் இருந்தும் வெளியேற்ற தைத் திருநாளில் உறுதி ஏற்போம்.
வைகோ (மதிமுக) : ‘உலகத்தாருக்கே அச்சாணி’ என வள்ளுவப் பெருந்தகையால் வருணிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வில் எண்ணற்ற இன்னல்கள் சூழ்ந்து விட்டன. நீர்நிலைகள், ஏரி, குளங்கள் காணாமல் போய்விட்டன. நீர் வரத்து பாதிக்கப்பட்டு விட்டது. இந்தத் துயரத்தில் இருந்து விவசாயிகள் விடுபட வேண்டும். காவிரி உள்ளிட்ட தமிழகத்தின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் விவசாயிகள், மகளிர், மாணவர் அனைவர் நலனையும் காக்கின்ற தொலைநோக்குப் பார்வையோடு முதல்வர் ஸ்டாலின் இந்தியாவின் பிற மாநிலங்கள் எலலாம் தமிழ்நாட்டைப் பின்பற்றுகின்ற வகையில் திராவிட மாடல் ஆட்சியில் பொன் முத்திரையை பதித்து வருகிறார். இந்துத்துவா சக்திகளையும், சனாதனக் கூட்டங்களையும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் பூமியில் அடியோடு முறியடிப்போம். உலகம் முழுமையும் கொண்டாடி மகிழ்கின்ற தமிழ்க்குடி மக்கள், ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ) : புவிப் பரப்பெங்கும் விரிந்து, பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். உலகின் பல்வேறு பகுதிகளில் பொங்கல் திருநாள் சமத்துவ பொங்கலாகவே கொண்டாடப்படுகிறது. சாதி, மதம், இனம் கடந்து மக்களின் ஒற்றுமையை பறைசாற்றுவதாக பொங்கல் திருநாள் விளங்குகிறது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிற பொதுவுடைமை சமூகத்தை சமைத்திட, இந்த பொங்கல் திருநாளில் உறுதியேற்போம்.
வண்ணங்கள் இணைகிற போதுதான் வாசலில் போடப்படுகிற கோலம் அழகாகிறது. அதேபோல பல்வேறு மதங்களை பின்பற்றுகிற, பல்வேறு மொழிகள் பேசுகிற, பல்வேறு பண்பாடுகளை கொண்டுள்ள பன்முகத்தன்மையே இந்தியாவின் பேரழகாகும். ஆனால் இந்த பன்முகத்தன்மையை அழித்து ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு எனத் துவங்கி இப்போது ஒரு நாடு, ஒரே தேர்தல் என்கிற அளவுக்கு செல்கிறது ஆர்எஸ்எஸ் பரிவாரத்தால் இயக்கப்படும் ஒன்றிய அரசு. இத்தகைய சதித்திட்டங்களை முறியடித்து இந்திய மக்களின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டியது மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளின் மகத்தான கடமைகளில் ஒன்றாக முன் நிற்கிறது.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முதுமொழி. பிறந்திருக்கும் தை அனைத்துப் பகுதி மக்களின் நல்வாழ்விற்கான வழிகளை திறந்துவிடும் என்கிற நம்பிக்கையோடு அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்): உலகெங்கும் வாழும் தமிழர்களின் அறுவடைத் திருநாளான தைப்பொங்கல் விழாவையும் தமிழ் புத்தாண்டையும் கொண்டாடும் தமிழ்ச் சொந்தங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகில் இயற்கையை கொண்டாடும் ஒரே இனம் தமிழினம் தான். வாழ்க்கைக்கும், முன்னேற்றத்திற்கும் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் இனமும் தமிழினம் தான். தமிழ்நாட்டை பீடித்திருக்கும் அனைத்து தீமைகளும் விலக வேண்டும். அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், நன்மை, அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம், சமூகநீதி ஆகியவை செழிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக, தமிழர்களின் வாழ்க்கையில் தைத்திருநாளும், தமிழ்ப் புத்தாண்டும் எல்லா நன்மைகளையும் வழங்கட்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புமணி ராமதாஸ் (பாமக தலைவர்) : இயற்கைக்கு தமிழர்கள் நன்றி செலுத்தும் திருநாளான பொங்கல் விழாவையும், தமிழ் புத்தாண்டு நாளையும் கொண்டாடும் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகில் இயற்கையை கொண்டாடும் ஒரே இனம் தமிழினம் தான். பொங்கல் திருநாளில் இயற்கையை வனங்கும் நாம், அதை போற்றவும், காக்கவும் வேண்டும். பொங்கல் திருநாள் உருவாக்கப்பட்டதன் நோக்கங்களில் இயற்கையை காக்க வேண்டியன் அவசியத்தை வலியுறுத்துவதும் ஒன்றாக இருக்க வேண்டும். இயற்கையை வணங்கும் தமிழர்களுக்கு அண்மைக்காலமாக இயற்கையால் தான் தீமைகள் ஏற்படுகின்றன. அந்த அளவுக்கு இயற்கையை மனிதகுலம் சிதைத்து வைத்திருப்பது தான் அனைத்துக்கும் காரணமாகும்.
தமிழகம் பல வகைகளிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை இருள் சூழ்ந்திருக்கிறது. அந்த இருள் அகற்றப்பட வேண்டும்; தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும். அத்துடன், அன்பு, அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி, நல்லிணக்கம், ஒற்றுமை, வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து நலங்களையும், வளங்களையும் தைத்திங்களும், தமிழ்ப்புத்தாண்டும் வழங்க வேண்டும். தை கொடுக்காததை தரணி கொடுக்காது என்பதே உண்மை. அதற்காக உழைக்க இந்த தைத்திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டில் தமிழர்களாகிய நாம் இயற்கையின் முன் உறுதியேற்றுக் கொள்வோம்.
கி.வீரமணி (திராவிடர் கழகம்): உழைப்பின் அறுவடைத் திருநாளான பொங்கல் விழா மட்டுமல்ல; உண்மையான தமிழ்ப் புத்தாண்டு தொடக்கமும் ஆகும். பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி தழைத்தோங்கும் தமிழர்தம் புத்தாக்கமாகவும் இவ்வாண்டு அமையட்டும். அனைவருக்கும் புத்தாண்டு – பொங்கல் வாழ்த்துகள்.
ஓபிஎஸ் (அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு) : தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்ப் பண்பாட்டை உலகிற்கு உணர்த்தும் விழாவாக, பயிர் விளையக் காரணமாயிருந்த பகவலனுக்கு நன்றி செலுத்தும் விழாவாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாள் தமிழர்களின் நன்றி மறவா பண்பினை உலகுக்கு உணர்த்தும் திருநாள். தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பார்கள். இதற்கேற்ப தமிழ்நாட்டு மக்களுக்கு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்து, இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல், இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள் என்று வாழ்த்தி, அனைவருக்கும் எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
பண்ருட்டி தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி); உலகத்தமிழர்கள் அனைவருக்கும் தமிழர் புத்தாண்டு, தமிழர் திருநாள் வாழ்த்துகள். தத்துவம், அரசியல், பொருளியல், பண்பியல், சூழலியல் என அனைத்து துறையிலும் தமிழ் தேசிய உரிமைப் போராட்டங்கள், வெகுமக்கள் போராட்டங்களாக – சனநாயகப் போராட்டங்களாக வீச்சுப் பெற உறுதி ஏற்போம். நம் முன்னோர்களின் வழியில் நின்று, பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சனாதனக் சக்திகள் பரப்பி வரும், சாதிய படிநிலைகளையும், சாதிய சமூக வேறுபாடுகளையும், மதவெறி அரசியலையும் புறம் தள்ளுவோம்.
தமிழர்களாய் ஒன்று திரள்வோம் என்று கூறிக்கொண்டு, தமிழ்நாட்டு தமிழர்கள், ஈழத்தமிழர்கள், உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment