Published : 13 Jan 2025 02:59 AM
Last Updated : 13 Jan 2025 02:59 AM

கோடைகால மின்தேவையை சமாளிக்க பரிமாற்ற முறையில் மின்கொள்முதல் செய்ய மின்வாரியம் திட்டம்

கோடை மின்தேவையை சமாளிக்க, பரிமாற்ற முறையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழக மின்தேவை தினமும் சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இது கோடைக்காலத்தில் அதிகரித்தும், குளிர்காலத்தில் குறைந்தும் காணப்படும். இந்நிலையில், வரும் மார்ச் மாதம் முதல் கோடைக்காலம் தொடங்க உள்ளதால், மின்தேவை வழக்கத்தைவிட அதிகரிக்கும். அதைப் பூர்த்தி செய்ய அதிக மின்சாரம் தேவைப்படுகிறது.

இதற்காக, ‘ஸ்வேப்பிங்’ எனப்படும் பரிமாற்ற முறையில் மார்ச் 1 முதல் மே 31-ம் தேதி வரை மின்கொள்முதல் மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, மின்தேவையைப் பூர்த்தி செய்ய சொந்த மின்நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் போதவில்லை என்றால், மத்திய தொகுப்பு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.

மேலும், கோடைகாலத்தில் தினசரி மின்தேவை 20 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும். அதைப் பூர்த்தி செய்ய அதிக மின்சாரம் தேவைப்படும். அந்த சமயத்தில், மின்சந்தையில் ஒரு யூனிட் விலை ரூ.10-க்கும் மேல் இருக்கும். வடமாநிலங்களில் ஆண்டு தொடக்கத்தில் மின்தேவையைப் பூர்த்தி செய்தது போக உபரி மின்சாரம் அதிகம் உள்ளது. எனவே, அந்த மின்சாரத்தை பரிமாற்ற முறையில் தமிழகத்துக்கு கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, மார்ச் 1 முதல் மே 31-ம் தேதி வரை தமிழகத்துக்கு மின்சாரம் வழங்க விருப்பம் உள்ள நிறுவனங்களுடன் மின்வாரியம் ஒப்பந்தம் செய்ய உள்ளது.

அந்நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படும் மின்சாரம் காற்றாலை சீசன் தொடங்கியதும் வரும் ஜுலை முதல் செப்டம்பர் வரை திரும்ப வழங்கப்படும். இந்த முறையில் மின்சாரம் வாங்க பணம் செலவாகாது. கொள்முதல் செய்யப்படும் மின்சார அளவுடன் ஒன்று முதல் 5 சதவீதம் வரை கூடுதலாக மின்சாரம் வழங்க வேண்டும். அதன் அடிப்படையில், குறைந்த சதவீதம் குறிப்பிடும் நிறுவனங்களிடம் இருந்து பரிமாற்ற முறையில் மின்சாரம் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x