Published : 13 Jan 2025 12:40 AM
Last Updated : 13 Jan 2025 12:40 AM
கோவை: முதல்வர் ஸ்டாலின் குறித்து கடும் வார்த்தையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளுநர் தள்ளப்பட்டார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று இரவு கூறியதாவது: பாஜக தேசியத் தலைவர் நட்டாவின் அனுமதிக்குப் பின்னரே, ஈரோடு இடைத்தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை மேற்கொண்டுள்ளோம். இதுவரை தேர்தலை புறக்கணிக்காத பாஜக, தற்போது ஈரோடு இடைத்தேர்தலை ஏன் புறக்கணித்தது என்று மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அதேநேரத்தில், தேர்தலை நாங்கள் கண்காணிப்போம்.
தேர்தலில் போட்டியிட்டால்தான் தைரியம் என்பது கிடையாது. அதிகார துஷ்பிரயோகத்துக்கான முதலும் கடைசியுமான தேர்தலாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும். 2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். முதல்வர் குறித்து ஆளுநர் கடும் வார்த்தையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அவர் கூறியது சரியானதுதான். இனியாவது திமுக தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.
பெரியாருக்கும், நிகழ்காலத்துக்கும் தொடர்பு இல்லை. பாஜக எப்போதோ பெரியாரைக் கடந்துவிட்டது. 2023 ஆகஸ்ட் 17-ம் தேதி வரை கனிமவளம் என்பது மாநில அரசு கையில் இருந்தது. நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர், மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு மாறியது. டங்ஸ்டன் சுரங்க ஏலம் விட்டால்கூட, அதிலிருந்து பெறப்படும் தொகையில் ஒரு ரூபாய்கூட மத்திய அரசுக்கு கிடைக்காது. மாநில அரசுக்குத்தான் கிடைக்கும். எனவே, முதல்வர் சட்டப்பேரவையில் உண்மையைப் பேசவில்லை. தகுதியில்லாதவர் அரசாங்கத்தில் உயர் பதவிக்கு வந்தால், அந்த அரசு எவ்வகையில் பாதிக்கப்படும் என்பதற்கு உதயநிதியே சான்று. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...