Published : 12 Jan 2025 11:43 AM
Last Updated : 12 Jan 2025 11:43 AM

டெல்லி குடியரசு தின விழா: தமிழகம், புதுச்சேரியின் 12 விருதாளர்களுக்கு அழைப்பு

சென்னை: டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 12 விருதாளர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா வரும் 26-ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய நிகழ்ச்சிகளில் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில் அண்மைக்காலமாக நாடு முழுவதிலும் இருந்து பொதுமக்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப் படுகிறார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 12 விருதாளர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஜவுளி பிரிவில் தேசிய விருது பெற்ற சென்னையைச் சேர்ந்த கமலக்கண்ணன், மாமல்லபுரத்தைச் சேர்ந்த எம்.தேவராஜ், சேலத்தைச் சேர்ந்த ராஜஸ்தபதி, புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்த கே.வெங்கடேசன், ஏ.சேகர் ஆகியோரும் அடங்குவர்.

பேரிடர் நிவாரண பணியாளர்கள், நீர் பாதுகாப்பு ஆர்வலர்கள், சிறப்பாக செயல்படும் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சுய உதவி குழுக்கள், தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் சிறந்த பயிற்சி மாணவர்கள், கிராம செவிலியர்கள், மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்தவர்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஈடுபடுவோர், அங்கன்வாடி பணியாளர்கள், சாலை பணிகளில் ஈடுபடுவோர், சிறந்த புத்தாக்க தொழில் நிறுவனங்கள், சிறந்த காப்புரிமம் பெற்றவர்கள் உட்பட பலருக்கும் இந்த அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

சிறந்த உள்ளாட்சி அமைப்புகளை தேர்வு செய்வதற்காக அண்மையில் மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர் துறை சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் குறைந்தது 6 திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியவர்கள் இப்பட்டியலில் அடங்குவர்.

வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல், வருவாயை பெருக்குதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்ட சுயஉதவிக் குழுக்கள், குடியரசு தின அணிவகுப்புக்கான அழைப்புகளை பெற்றுள்ளன. உணவு, சுகாதாரம், தூய்மை, ஊட்டச்சத்து போன்ற பிரிவுகளிலும் சாதனையாளர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

இச்சிறப்பு அழைப்பாளர்கள் குடியரசு தின அணிவகுப்பை பார்வையிடுவதுடன் தேசிய போர் நினைவுச் சின்னம், இந்திய பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் டெல்லியில் உள்ள முக்கிய இடங்களையும் பார்வையிடுவார்கள். அவர்கள் தங்களது துறை சார்ந்த அமைச்சர்களுடன் கலந்துரையாடவும் வாய்ப்புகளை பெறுவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x