Published : 12 Jan 2025 09:48 AM
Last Updated : 12 Jan 2025 09:48 AM
புதுடெல்லி: தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் ‘அயலகத் தமிழர் தினம்’ ஜனவரி 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அயலகத் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு செய்து வரும் பணிகள் குறித்து மாநில சிறுபான்மையினர் நலன் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் தொடங்கப்பட்டதன் பின்னணி என்ன? தற்போதைய முக்கியப் பணிகள் என்ன?
பர்மா, வியட்நாம். இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய வம்சாவளியினருக்காக 1969-ல் இந்த ஆணையரகம் அமைக்கப்பட்டது. இவர்களுக்கான நலத்திட்டங்கள், நிவாரணப் பணிகளை இந்த ஆணையரகம் செய்கிறது. உதாரணமாக, இதன் மூலம் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் நிவாரண உதவி பெற்றுள்ளனர். வெளிநாடு வாழ் தமிழர் நலன் காக்க 2010-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி யால் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தில் தனி பிரிவு தொடங்கப்பட்டது.
இலங்கை தமிழர்களுக்காக இந்த பிரிவு செய்யும் நலத் திட்டங்களை கூறமுடியுமா?
இலங்கைத் தமிழ் மாணவர்களின் கல்வி இடைநிற்றலை தடுக்க கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 821 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.8,65,75,000 சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது. எரிவாயு சிலிண்டர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2,000 மானியம், நடப்பாண்டில் 58,211 பேருக்கு இலவச ஆடை மற்றும் பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், இக்குடும்பங்களுக்கு 7,469 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இவர் களது வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதியாக ஆண்டுதோறும் ரூ.5 கோடியில் அடிப்படை வசதிகளும், இதர அடிப்படை வசதிகளுக்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. 10 முகாம்களில் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அயலகத் தமிழர் நலனுக்கான பணிகள் என்ன?
சுடந்த 2015-ல் எடுத்த கணக்கெடுப்பின் படி, தமிழகத்தில் இருந்து 22 லட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர். இவர்களில் தாயகம் திரும்ப இயலாமல் கஷ்டப்படுவோரை அழைத்து வரவும், அங்கு இறக்கும் தமிழர் களின் உடலை இந்தியா கொண்டு வரவும் தமிழக அரசால் 2016 முதல் ரூ.1 கோடி சுழல் நிதி வழங்கப்படுகிறது. கடந்த 2021 மே 7 முதல் 2024 நவம்பர் 28 வரை அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அரசு செலவில் 2,414 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 864 உடல்கள் கொண்டு வரப்பட்டு. குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதற்காக மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் தொடர்புடைய இந்திய தூதரகங்களின் உதவிகளை பெறுகிறோம்.
நான்காவது ஆண்டாக கொண்டாடப்படும் அயலகத் தமிழர் நாளின் நோக்கம் என்ன?
தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், அயல் நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அதன் பணிகளை அங்கீகரிக்க ஆண்டுதோறும் ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் அயலகத் தமிழர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் உள்ள தமிழர்களை தங்கள் தாய்வீடான தமிழ் நாட்டுக்கு அழைத்து கொண்டாடுகிறோம். இதன்மூலம், தொழில், கல்வி, பண்பாடு என பல்வேறு தளங்களில் தமிழ்ச் சமூகங்களை இணைத்து முன்செல்ல வைப்பதும் இதன் நோக்கம்.
வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதில் உங்கள் பங்களிப்பைக் கூற முடியுமா?
இதற்காக ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையில் இருக்கிறோம். இதன் முதல்கட்டமாக 10 நாடுகளில் ஒருங்கிணைப்பு மையங்கள் (Country Desks) 10 துறைகளுடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் தமிழ் இணையக் கல்விக்கழகம் தொடர்பு மையங்கள் அமைத்து தமிழ் கற்பிக்க துணையாக இருந்து வருகிறோம்.
அயலகத் தமிழர்களுக்கான காவல் துறை சிறப்பு பிரிவு குறித்து?
காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் அயலகத் தமிழர்களுக்கென சிறப்பு பிரிவு செயல்படுகிறது. இப்பிரிவில் வெளிநாட்டில் அயலகத் தமிழர்களுக்கு பாதுகாப்பு, பண மோசடி மற்றும் நில அபகரிப்பு உள்ளிட்ட புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அயலகத் தமிழர்கள் தாங்கள் வாழும் பகுதியில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், துன்புறுத்தல், சுரண்டல், ஊதியம் சரியாக வழங்காமல் ஏமாற்றுதல் போன்றவற்றில் சட்ட ரீதியான உதவிகளை வழங்குகிறோம்.
முதல்கட்டமாக குறிப்பிட்ட நாடுகளில் சட்ட வல்லுநர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை உள்ளடக்கிய சட்ட உதவி மையம் அமைத்துள்ளோம். மேலும் மலேசியா, சவுதி, துபாய், ஓமன், பஹ்ரைன் ஆகிய 5 நாடுகளில் சட்ட உதவி மைய ஒருங்கிணைப்பாள் in (Para-Legal Co-ordinators) நியமிக்கப்பட்டு, அங்குள்ள தமிழர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது.
‘எனது கிராமம்’ திட்டத்தின் பலன்களை சுருக்கமாக கூறுங்களேன்?
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பங்களிப்பை கொண்டு தமிழ்நாட்டில் அவர்களது சொந்த ஊரை மேம்படுத்த ‘எனது கிராமம்’ திட்டம் தொடங்கப்பட்டது. 2023-24-ல் 3 அயலகத் தமிழர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது. தாங்கள் படித்த அரசுப் பள்ளியை மேம்படுத்தவோ, கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவோ நிதியுதவி செய்ய விரும்புவோர் இத்திட்டத்தின் மூலம் செய்யலாம்.
அயலகத் தமிழர்கள் இடையே தமிழ் மொழி, கலாச்சாரம் வளர்ப்பதில் ஆணையரகத்தின் பங்கு என்ன?
சிறப்பாக செயல்படும் தமிழ்ச் சங்கங்கள் மற்றும் அமைப்புகளை ஒரே தளத்தில் இணைக்க செயலாற்றி வருகிறோம். ‘வேர்களைத் தேடி’ எனும் திட்டம் மூலம் அயலகத் தமிழர் வாரிசுகளில் ஆண்டுதோறும் 200 இளைஞர்கள் தேர்வாகின்றனர். இவர்களுக்கு தமிழகப் பண்பாட்டுச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்களை அவர்கள் வாழும் நாடுகளுக்கான பண்பாட்டுத் தூதுவர் என அறிவித்து தமிழ்ப் பணியை சிறக்க செய் கிறோம். ‘தமிழர் தடம்’ என்ற திட்டம் மூலம் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில், அயலகத் தமிழர்கள் தங்களுக்கான கணக்குகளை தொடங்கி பதிவுகள் போடலாம். இவ்வாறு அமைச்சர் நாசர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment