Published : 12 Jan 2025 06:39 AM
Last Updated : 12 Jan 2025 06:39 AM
சென்னை / ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெறும் என்ற நம்பிக்கை இல்லாததால் இதை புறக்கணிப்பதாக அதிமுக, தேமுதிக அறிவித்துள்ளன.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். அவர் காலமானதால். 2003-ல் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவரும், திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். உடல்நலக் குறைவால் அவர் கடந்த டிசம்பர் 14-ம் தேதி காலமானதை அடுத்து. இக்கொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப்பதிவு, 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் 2-வது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு கேட்டு வந்தார். இந்த நிலையில், ‘முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால், திமுக வேட்பாளர் போட்டியிடுவார்’ என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். ‘காங்கிரஸுடன் கலந்து பேசியதில். திமுக போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டது. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் திமுக வேட்பாளராக கொள்கை பரப்பு இணை செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார்’ என்று அறிவித்தார். இதையடுத்து, முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சந்திரகுமார் வாழ்த்து பெற்றார். அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, முத்துசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
‘தேர்தலில் நம்பிக்கை இல்லை’ - இதற்கிடையே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன். துணை பொதுச்செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். இதன் பிறகு, பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த முறை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணம், மது, கொலுசு, குக்கர், தங்கக் காசு விநியோகம், திமுகவினரின் மிரட்டல், வாக்காளர்களை பட்டியில் அடைத்தது என பல அவலங்கள் நடந்தன. நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தை அமைச்சர்கள், திமுகவினர் தவறாக பயன்படுத்துவார்கள். பண பலம், படை பலத்துடன் பல்வேறு அராஜகங்கள், வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள். தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடக்காது. அதனால், இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில்: ‘ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஆட்டுமந்தைபோல மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக விரோத தேர்தலை திமுக நடத்தி வெற்றி பெற்றனர். அதே பாணி இடைத்தேர்தல்தான் மீண்டும் நடக்கப் போகிறது. ஜனநாயகத்துக்கு விரோதமாக நடக்கும் இந்த தேர்தலில் நம்பிக்கை இல்லாததால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிட்டு 43,923 வாக்குகளை பெற்றார். கடந்த ஆண்டு நடந்த விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை தொடர்ந்து, தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை யும் அதிமுக, தேமுதிக கட்சிகள் புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கின் முதல் தேமுதிக எம்எல்ஏ: திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வி.சி.சந்திரகுமார், ஈரோட்டை சேர்ந்தவர். எம்.ஏ. (பொது நிர்வாகம்) படித்தவர். ஜவுளி மொத்த வியாபாரம் செய்பவர். மனைவி, ஒரு மகள் (பல் மருத்துவர்). ஒரு மகன் (சட்ட மாணவர்) உள்ளனர்.
கடந்த 1987-ல் திமுக வார்டு பிரதிநிதியாக அரசியல் பயணத்தை தொடங்கினார். விஜயகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட தலைவராக இருந்தவர் தேமுதிகவில் இணைந்து, 2006 முதல் 2015 வரை தேமுதிக கொள்கை பரப்பு செயலாளராக இருந்தார். 2011-ல் பிரிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியின் முதல் தேமுதிக எம்எல்ஏ என்ற பெருமைக்கு உரியவர்.
2015-ல் தேமுதிகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார். 2016 சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் தென்னரசுவிடம் தோல்வி அடைந்தார். 2016 முதல் திமுக கொள்கை பரப்பு அணி மாநில இணை செயலாளராக உள்ளார். பல்வேறு தேர்தல்களில் திமுக பொறுப்பாளராக இருந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...