Published : 11 Jan 2025 03:06 PM
Last Updated : 11 Jan 2025 03:06 PM
சென்னை: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்படும், என்பது உள்ளிட்ட 4 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், கடந்த 3 நாட்களில் மொத்தம் 25 உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது 10 உறுப்பினர்கள் 112 திருத்தங்களை வழங்கியிருக்கிறார்கள். இந்த அரசுக்கு உதவுகிறவகையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.
தங்களுடைய தொகுதிக்கான கோரிக்கைகளையும் முன்வைத்திருக்கிறார்கள். அவை அனைத்தும் அமைச்சர்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுடைய ஆலோசனைகளை கருத்தில் கொண்டு, அதில் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு உறுதியாக நிறைவேற்றித் தரும், என்று முதல்வர் கூறினார். முன்னதாக, 4 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
> பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புற பகுதிகளில் ஏழு தனிச் சிறப்பு நீதிமன்றங்கள் புதிதாக அமைக்கப்படும். இத்தகைய குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க, மாவட்டந்தோறும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில சிறப்புக் குழு அமைக்கப்படும். பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்று, சிறையில் இருக்கின்ற கைதிகளுக்கு, முன்விடுதலை கிடைக்காதவகையில தமிழ்நாடு சிறைத் துறை விதிகள் திருத்தம் செய்யப்படும்.
> மாநிலத்தின் நகர்ப்புர உள்ளாட்சி, உள்ளாட்சி அமைப்புகளை ஒட்டியுள்ள கிராமங்களும் மிக விரைவாக வளர்ச்சி அடைந்து வருவதால் பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி அமைப்புகளின் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உதயமாகி இருக்கின்றன. இந்த நகரங்களில் வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும்வகையில் இந்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலுள்ள சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் புதிய சாலைகளை அமைத்திடவும், பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைத்து புதுப்பித்திடவும், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைகளால் சேதப்பட்டுள்ள சாலைகளை சீரமைத்திடவும் வரும் ஆண்டுகளில் 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புர சாலை பணிகள் மேற்கொள்ளப்படும்.
> பல்வேறு கோரிக்கைகளை ஏற்று மக்களுக்கான போக்குவரத்து வசதியை மேம்படுத்த வரும் ஆண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு விரைந்து கொண்டு வரப்படும்.
> இந்த அரசு பதவி ஏற்றபின் ஏழை எளிய பட்டியலின மக்களுக்கு 2 லட்சத்து 67 ஆயிரத்து 437 மனைகளை வரன்முறைப்படுத்தி இ-பட்டா வழங்கப்பட்டிருக்கின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்விதமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சீர்செய்தும் புதியதாக நிலங்களை கையகப்படுத்தியும் ஒரு லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் அவர்களுக்கு வழங்கப்படும், என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment