Last Updated : 10 Jan, 2025 04:33 PM

 

Published : 10 Jan 2025 04:33 PM
Last Updated : 10 Jan 2025 04:33 PM

கறார் வசூலில் ‘கரூர் டீம்’ - கதிகலங்கி நிற்கும் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள்!

சாய்​பாபா காலனி​ களேபரம்...

அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவதற்கு முன்பு தமிழகம் முழுமைக்கும் ‘கரூர் டீம்’ என்று சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் டாஸ்மாக் பார்களில் டாம்பீகம் பண்ணிக் கொண்டிருந்தது. அமைச்சர் ஜெயிலுக்குப் போனதால் ‘கரூர் டீம்’ கப்சிப் ஆனது. இப்போது மீண்டும் ‘கரூர் டீம்’ தனது ‘வழக்கமான’ வேலையில் இறங்கிவிட்டதாக பதறுகிறார்கள் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள்! ​டாஸ்​மாக் பார்​களில் அதிரடி வசூல், பாட்​டிலுக்கு 10 ரூபாய் கூடு​தலாக வசூல் உள்ளிட்ட சமாச்​சா​ரங்​களில் கரூர் டீமின் தலை தாராளமாக உருள்​கிறது.

டாஸ்​மாக் பார்​களுக்கான உரிமம் புதுப்​பிக்க ‘கட்​டிங்’ கேட்​கும் கரூர் டீம், பார்​களில் வசூலுக்கு ஏற்ப மாதா மாதம் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை கட்சி​யின் பெயரில் கப்பம் கட்டச் சொல்​வ​தாக​வும் கோவை டாஸ்​மாக் பார் உரிமை​யாளர்கள் கதறுகிறார்​கள். கேட்​டதைத் தராத பார் உரிமை​யாளர்களை கருர் டீமின் ‘கலெக் ஷன் பாய்ஸ்’ கண்டபடி மிரட்டு​வ​தாக​வும், அந்த பார்களை டாஸ்​மாக் அதிகாரி​களின் துணை​யுடன் பூட்டி சீல் வைப்​ப​தாக​வும் புகார் எழுந்​துள்ளது. இப்படித்​தான், அண்மையில் கோவை காந்​திபுரம் பகுதி​யில் பார் நடத்​தும் கருப்பு​சாமி என்பவரை கரூர் டீம் ‘கட்​டிங்’ கேட்டு மிரட்​டிய​தாகத் தெரி​கிறது.

இதையடுத்து ஜனவரி 4-ம் தேதி கருப்பு​சாமி தனது ஆட்களுடன் சென்று சாய்​பாபா காலனி​யில் உள்ள கரூர் டீமைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவரின் அலுவல​கத்தை முற்றுகை​யிட்டு போராட்டம் நடத்​தி​யுள்ளார். அப்போது இரு தரப்​புக்​கும் இடையே வாக்கு​வாதம் முற்றி கைகலப்​பானது. இதில் ஈஸ்வரமூர்த்தி தரப்​பினர் தாக்​கப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. இது தொடர்பாக சாய்​பாபா காலனி போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து கருப்பு​சாமி தரப்​பைச் சேர்ந்த சிலரைக் கைதும் செய்திருக்​கிறார்​கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவை டாஸ்​மாக் பார் உரிமை​யாளர்கள் சிலர், “கோவை​யில் உள்ள டாஸ்​மாக் பார்களை ஈஸ்வரமூர்த்தி​யின் கரூர் டீம் தான் கட்டுப்​பாட்​டில் வைத்​துள்ளது. ஒவ்வொரு பாரிலும் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை மாதா மாதம் கட்சிக்காக என்று சொல்லி வசூலிக்​கின்​றனர்.

இதைச் சமாளிக்க முடி​யாமல் பார் உரிமை​யாளர்கள் பயந்து ஒதுங்கி நிற்​கின்​றனர். ஓராண்டாக இந்தக் கெடு​பிடிகள் இல்லாமல் நிம்​ம​தியாக இருந்​தோம். இப்போது திடீரென மீண்​டும் கட்சி பணம் கேட்டு மிரட்டு​கின்​றனர். கொடுக்க மறுத்​தால் அதிகாரிகள் உதவி​யுடன் பார்களை பூட்டி சீல் வைத்து வேறொரு​வருக்கு அதை ஒதுக்​கீடு செய்து விடு​கின்​றனர்.

அரசுக்கு செலுத்த வேண்டிய டெண்டர் தொகையை செலுத்​தாமலும் ஏராளமான பார்கள் அனும​தி​யின்றி கரூர் பார்ட்​டிகளின் ஆதரவுடன் நடத்​தப்​படு​கிறது. அந்தப் பார்​களி​லும் கெடு​பிடி வசூல் செய்​கின்​றனர். ஆளும் கட்சி​யின் ஆதரவு கரூர் டீமிற்கு இருப்​ப​தால் எங்களால் எதுவும் செய்ய முடி​யாமல் கையறு நிலை​யில் உள்ளோம்” என்றனர். அமைச்சர் செந்​தில்​பாலாஜிக்கு நெருக்​க​மானவர் எனச் சொல்​லப்​படும் ஈஸ்வரமூர்த்தி​யிடம் விளக்கம் கேட்க அவரைத் தொடர்பு கொண்​டோம்.

“முக்​கியமான மீட்​டிங் இருக்​கிறது, அப்புறம் பேசுகிறேன்” எனச் சொல்​லி​விட்டு இணைப்​பைத் துண்​டித்​துக் கொண்​டார். கரூர் டீம் ஆட்கள் கோவை​யில் மட்டுமல்​லாது தமிழகம் ​முழுக்கவே இஷ்டத்​துக்கு இப்படி அதிகாரம் செய்​வ​தாகச் சொல்கிறார்​கள். இவர்​களுக்கு கடி​வாளம் ​போ​டா​விட்​டால் அமைச்​சருக்கு மட்டுமல்ல ஆளும் கட்​சிக்​கும்​ சிக்​கல்​ ​தான்​!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x