Published : 10 Jan 2025 01:19 PM
Last Updated : 10 Jan 2025 01:19 PM
சென்னை: தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் மதுரை - தூத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்டு வரும் அமிர்த பாரத் 2.0 படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை அமைச்சர அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளரிடம் அவர் கூறியதாவது: நாடு முழுவதும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்துக்கு ரயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிதாக ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இத்திட்டத்தை வேண்டாம் எனக் கூறி தமிழக அரசிடம் இருந்து எழுத்துபூர்வமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் இத்திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட்டது.
ஏழை எளிய மக்களும் வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் அனுபவத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக குறைந்த கட்டணத்தில் அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், தற்போது படுக்கை வசதி கொண்ட அம்ரித் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு அனைத்து சோதனைகளும் நிறைவடைய குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது ஆகும்.
அந்த வகையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 அம்ரித் ரயில்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.
தமிழகத்தில் பாம்பன் பாலம் அமைக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்று சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அந்த பாலமும் திறந்து வைக்கப்படும். அதேபோன்று ஜம்மு காஷ்மீர் இடையே வந்தே பாரத் ரயில் பாதை அமைக்கும் பணியும் நிறைவு பெற்றுள்ளது. சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்த பின்னர் அங்கு ரயில் இயக்கப்படும். கடந்த நிதியாண்டில் ரயில்வே மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரை 76 சதவீதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT