Published : 10 Jan 2025 12:28 PM
Last Updated : 10 Jan 2025 12:28 PM
சென்னை: 2025-ம் ஆண்டு தமிழ்நாடு, பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்தச் சட்ட முன்வடிவுகளை முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார். ஏற்கெனவே இத்தகைய குற்றங்களுக்கு தண்டனைகள் வரையறுக்கப்பட்டிருந்தாலும், இத்தண்டனைகளை மேலும் கடுமையாக்கிவிட வேண்டிய அவசியம் உள்ளதாகவே இந்த அரசு கருதுகிறது, என்று முதல்வர் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில், இன்று (ஜன.10) பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான இரண்டு சட்டத்திருத்த முன்வடிவுகளை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து, பேசியதாவது: சமூகத்தில் சரிபாதியான பெண் இனத்தின் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தரக்கூடிய அரசு திமுக அரசு. சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்து வகையிலும் பெண்களை முன்னேற்றி வரக்கூடிய அரசாக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சியை நாம் தினந்தோறும் அறிந்தும், உணர்ந்தும் வருகிறோம். இதன்மூலம் பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாகி வருகிறது.
இத்தகைய சூழலில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டு வருகிறது. பெண்கள் அதிகம் வேலைக்கு செல்லும் மாநிலமாகவும், அதிகமான சமூகப் பங்களிப்பு செய்யும் மாநிலமாகவும் தமிழகம் வளர்ந்து வருகிறது. அதேநேரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தாக வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சணியமின்றி நடவடிக்கை எடுத்து சட்டப்படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனைகளை வாங்கித் தருவதில் உறுதியோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, ஒடுக்கி வருகிறது இந்த அரசு. 86 விழுக்காட்டுக்கும் மேலான குற்றங்களில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றம் என்பது யாராலும் மன்னிக்கமுடியாத குற்றம். இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை என்பது, இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கான கடும் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும்.
இந்த வகையில் BNS சட்டத்தின் கீழும், நமது மாநில அரசின் சட்டங்களின் கீழும், ஏற்கெனவே இத்தகைய குற்றங்களுக்கு தண்டனைகள் வரையறுக்கப்பட்டிருந்தாலும், இத் தண்டனைகளை மேலும் கடுமையாக்கிவிட வேண்டிய அவசியம் உள்ளதாகவே இந்த அரசு கருதுகிறது. இந்த அடிப்படையில், இத்தகைய குற்றங்களுக்கான தண்டனைகளை மேலும் கடுமையாக்குவதற்காக BNS மற்றும் BNSS சட்டங்களின் மாநில சட்டத் திருத்தத்துக்கும், தமிழ்நாடு 1998-ம் ஆண்டு பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்திருத்தத்துக்கும், சட்ட முன்வடிவுகளை பேரவையின் ஒப்புதலுக்காக முன்வைக்கிறேன். அனைத்து உறுப்பினர்களும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...