Published : 10 Jan 2025 05:45 AM
Last Updated : 10 Jan 2025 05:45 AM
சென்னை: கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதிமுதல் ஊதிய உயர்வு வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சென்னையில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசின் கைத்தறி, துணிநூல் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோ-ஆப்டெக்ஸ், இந்திய அளவில் முன்னணி கைத்தறி நிறுவனமாகச் செயல்படுகிறது. இதற்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் 150 விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் விற்பனை பிரிவு ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதிமுதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அரசாணைப்படி வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி உயர்த்தி வழங்க வேண்டும். விற்பனை பிரிவில் பணிபுரியும் ஊழியர்களும் உயர் பொறுப்புகளில் நியமனம் செய்யப்படும் வகையில் பணியாளர் பணி விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும். பதவி உயர்வு அனைத்து நிலையில் கிடைக்கச் செய்யும் வகையில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் கோ-ஆப்டெகஸ் ஊழியர்கள் சங்கத் தலைவர் பாரதி, பொதுச் செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் குமார் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தின்போது இச்சங்கத்தின் தலைவர் பாரதி கூறுகையில், ``பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் கொடுக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் மிரட்டப்படுகின்றனர்.
விசாகா கமிட்டி முறையாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் செயல்பட வேண்டும். விற்பனை தரகு திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பெண் ஊழியர்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT