Published : 10 Jan 2025 01:49 AM
Last Updated : 10 Jan 2025 01:49 AM
சென்னை: ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களின் ஒருங்கிணைப்பு பணியானது இன்று (ஜனவரி 10) தொடங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு நிலையத்தை 2035-ம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவமுடிவு செய்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்டத்தின்கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது.
இதற்காக வடிவமைக்கப்பட்ட ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30-ம் தேதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
இவற்றின் தூரத்தை 225 மீட்டராக குறைக்க நேற்று முன்தினம் முயற்சிக்கப்பட்டது. அப்போது புறச்சூழல்கள் காரணமாக விண்கலன்களின் இயக்கத்தின் வேகம் எதிர்பார்த்ததைவிட குறைந்துவிட்டது. இதனால் நேற்று திட்டமிடப்பட்டிருந்த விண்கலன்கள் ஒருங்கிணைப்பு நிகழ்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களின் ஒருங்கிணைப்பு செயல்பாடுகள் இன்று (ஜனவரி 10) தொடங்கப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், ‘இரு விண்கலன்களையும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக கொண்டு செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை (இன்று) தொடங்கும். இரு விண்கலன்களும் பாதுகாப்பாக உள்ளன”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT