Published : 10 Jan 2025 01:25 AM
Last Updated : 10 Jan 2025 01:25 AM

முதல்வரின் தனி தீர்மானம் நிறைவேற்றம் முதல் பாஜக வெளிநடப்பு வரை: பேரவையில் நடந்தது என்ன?

துணைவேந்தர் நியமனம் தொடர்பான யுஜிசியின் வரைவு நெறிமுறைகளை மத்திய கல்வித் துறை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த அரசினர் தனி தீர்மானம், அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது.

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு தேடுதல் குழு அமைப்பதில் ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ள பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி), அதுதொடர்பான வரைவு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில், அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:

துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்படும் தேர்வு குழுவை ஆளுநரே தீர்மானிப்பார் என்று யுஜிசி விதிமுறை வகுத்துள்ளது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரின் கையில் கொடுப்பது, பல்கலைக்கழகங்களை சிதைக்கும் செயல். தன்னிச்சையாக துணைவேந்தர்களை நியமிக்கும் வகையில் ஆளுநர்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்குவது சரி அல்ல, முறையும் அல்ல. இந்த விதிமுறை கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. மாநில உரிமைகளில் தலையிடுவது மாநில அரசுகளை சிறுமைப்படுத்தும் செயல்.

நியமன பதவிகளில் ஒருசில ஆண்டுகள் இருந்துவிட்டு செல்பவர்களுக்கு மாநில மக்களின் அடிப்படை உணர்வை புரிந்துகொள்ள இயலாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவோரிடம்தான் கல்வி தொடர்பான அதிகாரம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான், அனைத்து மக்களுக்குமான கல்வியை முழுமையாக கொடுக்க முடியும்.

இந்த தீர்மானத்தை ஏற்று மத்திய அரசு மனம் மாறாவிட்டால், மக்கள் மன்றத்தையும், நீதிமன்றத்தையும் நாடுவோம் என்ற முன்னுரையுடன் இந்த தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக சமீபத்தில் யுஜிசி வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற வேண்டும் என இப்பேரவை கருதுகிறது. அதேபோல, இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளில் குறைந்தபட்ச வரைவு நெறிமுறைகள் - 2024, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்வி பணியாளர்கள் நியமனம், பதவி உயர்வுக்கான வரைவு நெறிமுறைகள் - 2025 ஆகியவை தேசிய கல்விக் கொள்கை - 2020-ன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. யுஜிசியின் இத்தகைய நடவடிக்கைகள் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

தமிழகத்தில் சமூகநீதி கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வலுவான உயர் கல்வி கட்டமைப்பு மற்றும் தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை இது கடுமையாக பாதிக்கும் என்பதால், யுஜிசியின் இந்த 2 வரைவு நெறிமுறைகள் மற்றும் துணைவேந்தர் நியமனம் தொடர்பான வரைவு நெறிமுறைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று மத்திய கல்வித் துறையை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இவ்வாறு முதல்வர் பேசினார். இந்த தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் பேசினர்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக) பேசும்போது, ‘‘மத்திய அரசின் நடவடிக்கை, மாநில அரசுகள் மீது தொடுக்கப்பட்ட யுத்தம். நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்களின் ஆதரவு கோரி கடிதம் எழுதியதுபோல, யுஜிசி வரைவு அறிவிக்கை விவகாரத்திலும் அனைத்து மாநில முதல்வர்களின் ஆதரவை முதல்வர் ஸ்டாலின் நாட வேண்டும். இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டும்’’ என்றார்.

ஜி.கே.மணி (பாமக) பேசியபோது, ‘‘தமிழகத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் நிர்வாகம், துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். தமிழகத்தின் உரிமையை காக்கும் இந்த தீர்மானத்தை வரவேற்கிறோம்’’ என்றார்.

அமைச்சர் கோவி. செழியன், எழிலரசன் (திமுக) மற்றும் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, மமக, கொமதேக, தவாக, புரட்சி பாரதம் கட்சிகளின் உறுப்பினர்களும் தீர்மானத்தை ஆதரித்து பேசினர்.

தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய நயினார் நாகேந்திரன் (பாஜக), ‘‘மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்தான் யுஜிசி சில திருத்தங்களை கொண்டு வருகிறது. இதில் உள்ள நிறை, குறைகள் குறித்து மாநில அரசுகள் கருத்து தெரிவிக்க பிப்ரவரி 5-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. அதற்கு முன்பே தீர்மானம் கொண்டு வருவது சரி அல்ல. மேலும், இது ஒரு வரைவு அறிக்கைதான். இறுதி முடிவு அல்ல. எனவே, இந்த தீர்மானத்தை பாஜக ஏற்கவில்லை’’ என்றார். இதைத் தொடர்ந்து, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் அரசினர் தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x