Published : 10 Jan 2025 01:06 AM
Last Updated : 10 Jan 2025 01:06 AM
சென்னை: பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்காதது ஏன் என்பது குறித்து சட்டப்பேரவையில் நேற்று அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு பதிலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “இந்தாண்டு பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புயல் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும் மக்களுக்கு நிவாரணம் வழங்கியது உள்ளிட்ட செலவினங்களுக்காக ரூ.2,028 கோடி செலவிடப்பட்டது. வெள்ள நிவாரணமாக ரூ.36,000 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரப்பட்டது. ஆனால், மத்திய அரசோ மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.226 கோடி மட்டுமே வழங்கியது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்துக்கு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2,159 கோடியும் வழங்கப்படவில்லை. அதனால்தான் பொங்கல் பரிசுத் தொகை வழங்க இயலாத நிலை ஏற்பட்டது" என்று தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகை ரூ.2,500 வழங்கப்பட்டது என்று அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி கூறினார். அதற்கு பதிலளித்த அவை முன்னவர் துரைமுருகன், “நீங்கள் தேர்தல் நேரத்தில் பொங்கல் பரிசுத் தொகை கொடுத்தீர்கள். இப்போது தேர்தல் வரவில்லை. அது வந்த பிறகு பார்ப்போம்" என்றார்.
பேரவையில் அவை முன்னவர் துரைமுருகன் பேசும்போது, “உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் கூறுவார்கள். அந்தந்த துறை அதிகாரிகள் வரிசையாக அமர்ந்திருப்பார்கள். பேரவையை அதிகாரிகள் மதிக்க வேண்டும். (அப்போது ஒரு அதிகாரிகூட இருக்கையில் இல்லை). எங்களை மதிக்க வேண்டும். அதிகாரிகள் பேரவை யில் இருக்க வேண்டும்" என்றார்.
அதையடுத்து “சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருக்கைக்கு வர வேண்டும்" என உத்தரவிட்ட பேரவைத் தலைவர் மு.அப்பாவு, இதுதொடர்பாக கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் தெரிவித்தார். அதன்பிறகும் அதிகாரிகள் வராததை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் அப்பாவு, “நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லிவிட்டேன். நாளை முதல் அதிகாரிகள் வருவார்கள். எல்லாம் சரியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT