Published : 10 Jan 2025 12:55 AM
Last Updated : 10 Jan 2025 12:55 AM
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக குமரி மாவட்டத்தை சேர்ந்த வி.நாராயணன் (60) நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி ஒருவரை எந்த உயரத்துக்கும் கொண்டுசெல்லும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது நாராயணனின் வாழ்க்கைப் பயணம்.
அன்றாட தேவைகளுக்கே சிரமப்பட்ட ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் நாராயணன். நாகர்கோவிலை அடுத்த மேலகிருஷ்ணன்புதூர் அருகேயுள்ள மேலக்காட்டுவிளை கிராமத்தை சேர்ந்த வன்னியபெருமாள், தங்கம்மாளின் மூத்த மகன் நாராயணன். இவருடன் பிறந்தவர்கள் 3 சகோதரர்கள் மற்றும் இரு சகோதரிகள். 6 குழந்தைகளின் படிப்பு, உணவுத் தேவைகளை, தேங்காய் வியாபாரியான வன்னியபெருமாளின் சிறு வருமானத்தை வைத்தே பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. நாராயணன் 8-ம் வகுப்பு வரை மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில்தான் படித்தார்.
மேலக்காட்டுவிளை அரசுப் பள்ளியில் தொடக்கக் கல்வியையும், சியோன்புரம் அரசு உதவிபெறும் பள்ளியில் 10-ம் வகுப்பையும் முடித்தார். அங்கு முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்ற அவர், நாகர்கோவில் அருகேயுள்ள கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளமோ முடித்தார். நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றதால், இஸ்ரோவில் வேலை கிடைத்தது.
பணியில் இருந்தபோது அஞ்சல் வழியில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றார். கோரக்பூர் ஐ.ஐ.டி.-ல் எம்.டெக். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர், ஏரோ ஸ்பேஸ் பொறியியலில் பிஹெச்.டி. பட்டம் பெற்றார்.
தற்போது திருவனந்தபுரம் வலியமலையில் உள்ள திரவ உந்துவிசை அமைப்புகள் மையத்தின் (எல்பிஎஸ்சி) இயக்குநராக உள்ள நாராயணன், தனது 20-வது வயதிலேயே இஸ்ரோவில் டெக்னீஷியனாக தனது பயணத்தைத் தொடங்கினார். 40 ஆண்டு பயணத்தில், இஸ்ரோவின் பல சாதனைகளின் பின்னணியில் நாராயணன் இருந்துள்ளார். அண்மையில் பிரதமர் மோடி திருவனந்தபுரம் இஸ்ரோ மையத்துக்கு சென்றபோது, நாராயணனை அழைத்துப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. நாராயணனுக்கு மனைவி கவிதாராஜ், மகள் அனுபமா, மகன் கைலேஷ் உள்ளனர்.
இஸ்ரோவின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இது 3-வது முறையாகும். மூவருமே குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தனி சிறப்பு. 2003 முதல் 2009 வரை இஸ்ரோ தலைவராக இருந்த மாதவன் நாயர், குமரி மாவட்டம் குலசேகரம் அருகே திருநந்திக்கரையைச் சேர்ந்தவர். 2018 முதல் 2022 வரை இஸ்ரோ தலைவராக இருந்த கே.சிவன், நாகர்கோவில் அருகே சரக்கல்விளையைச் சேர்ந்தவர். இவரும் அரசுப் பள்ளியில் பயின்றவர்தான். தற்போது இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணனும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்.
இவரது நியமனத்தால் குமரி மாவட்ட மக்கள், குறிப்பாக அவரது சொந்த கிராமமான மேலக்காட்டுவிளை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் நாராயணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுவரை 25-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள நாராயணன், இஸ்ரோ தலைவராக தொடர்ந்து சாதனைபுரிய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT