Published : 09 Jan 2025 05:27 PM
Last Updated : 09 Jan 2025 05:27 PM
மதுரை: மதுரை - கொல்லம் நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணியில் தென்மாவட்டத்திலுள்ள முக்கிய நகரங்கள் புறக்கணிக்கப்பட்டு, கேரளாவின் நலனுக்காக மட்டுமே திட்டம் செயல்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தென் தமிழகத்தையும், கேரளாவையும் சுற்றுலா, வர்த்தகரீதியாக இணைக்கும் வகையில் மதுரை-கொல்லம் இருவழிச் சாலையை நான்குவழிச் சாலையாக விரிவாக்கும் பணி நடந்து வருகிறது.
மதுரையில் இருந்து தென்காசி, குற்றாலம் செல்லக் கூடியவர்கள் இதுவரை ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், கடையநல்லூர் போன்ற நெருக்கடி மிகுந்த, குறுகலான நகர்ப்பகுதிகள் வழியாக சென்று வந்தனர். அதனால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் தொடர்கதையானதால் பேருந்து பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் மிகவும் சிரமம் அடைந்தனர்.
மதுரையில் இருந்து ராஜபாளையம் வழியாக தென்காசி செல்ல 165 கி.மீ. தொலைவை கடக்க 5 மணி நேரம் வரை ஆகிறது. குற்றால சீசன், சபரிமலை சீசன்களில் இந்த சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் நடந்தன. இதற்காகவே தற்போது மதுரையில் இருந்து தென்காசி வழியாக செல்லக்கூடிய மதுரை-கொல்லம் இருவழிச் சாலையை நான்குவழிச் சாலையாக மாற்றும் பணி துரிதமாக நடக்கிறது. இந்த சாலைப்பணி நிறைவு பெற்றால் மதுரையில் இருந்து தென்காசி செல்வதற்கு 2 1/2 முதல் 3 மணி நேரம்தான் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை-கொல்லம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் மதுரை, நாகர்கோவில், திருவனந்தபுரம் ஆகிய 3 மண்டலங்கள் இணைந்து ஈடுபட்டுள்ளன. முதற்கட்டமாக மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரை 71.6 கிலோ மீட்டர் தொலைவுக்கு ’பாரத்மாலா பரியோஜனா’ திட்டத்தின் கீழ் நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.1,264 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கின்றன. இப்பணிகள் 80 சதவீதத்துக்கும் மேல் நிறைவு பெற்றுள்ளன.
இதில் எம்.சுப்புலாபுரத்தில் இருந்து கிருஷ்ணன்கோவில் வரை தற்போது பயன்பாட்டில் உள்ள இருவழிச் சாலையே நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய ஊர்களை புறவழிச் சாலையாக கடக்கிறது. அடுத்த கட்டமாக ராஜபாளையத்தில் இருந்து புளியரை வரை 68 கி.மீ. நான்கு வழிச்சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சாலை ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் தெற்குவெங்காநல்லூரில் தொடங்கி சிவகிரி அருகே வாசுதேவநல்லூர், புளியங்குடி-சங்கரன்கோவில் சாலையை கடந்து சொக்கம்பட்டிக்கு முன்பாக தற்போதைய சாலையிலிருந்து பிரிந்து புளியரை வழியாக கொல்லம் செல்கிறது. இந்த நான்கு வழிச்சாலை கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை போன்ற முக்கிய நகரங்களை இணைக்காமலேயே நேரடியாக கொல்லத்துக்கு செல்கிறது.
இந்த சாலைக்காக நிலம் ஒப்படைத்தவர்களுக்கு தற்போது தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் சார்பில் பணம் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் நிறைவடைந்த பின்னர் சாலைப் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மதுரை-கொல்லம் நான்கு வழிச்சாலை, முழுக்க முழுக்க கேரளாவைச் சேரந்தவர்களுக்கு பயன்படும் வகையிலேயே அமைக்கப்படுவதாகவும், மாவட்டத் தலைநகரான தென்காசிக்கு 25 கி.மீ. முன்பே இந்த சாலை கேரளாவை நோக்கி பிரிந்து செல்வதாகவும், இந்த சாலையால் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வர்த்தகரீதியாக பின்தங்கியுள்ள புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்துக்கு எந்த பயனும் இல்லை என்றும் பொதுமக்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தற்போது தென்காசி செல்வதற்கு இணைப்பாக 6 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் என கூறப்படுகிறது. மற்றொருபுறம் திருநெல்வேலி-ஆலங்குளம்-பாவூர்சத்திரம்-தென்காசி நகரங்களை இணைத்து குற்றாலம் வழியாக கொல்லம் செல்வதற்கும் மற்றொரு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
வழக்கமாக ரயில் பாதை திட்டங்களில்தான் கேரளாவுக்கு பயன்தரும் வகையில் தமிழ்நாட்டின் நலன்களை புறக்கணித்து ரயில்கள் இயக்கப்படுவதாகவும், தமிழகத்தின் வழியே ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழும். ஆனால் தற்போது நெடுஞ்சாலைப் பணிகளிலும் தமிழகத்தின் முக்கிய நகரங்களை புறக்கணித்துவிட்டு கேரளாவில் இருந்து வந்து செல்லக்கூடிய வாகனங்களுக்காக மதுரை-கொல்லம் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏற்கெனவே சுற்றுச்சாலை, அரசு மருத்துவக் கல்லூரி உட்பட எந்த முக்கிய திட்டங்களும், வேலைவாய்ப்புகளும் இதுவரை கிடைக்கப்பெறாத தென்காசி மாவட்டம், தற்போது இந்த நான்கு வழிச்சாலை திட்டத்திலும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தென் மாவட்ட மக்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.
ஜூலையில் பயன்பாட்டுக்கு வரும்: தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘திருமங்கலம்-ராஜபாளையம் வரையில் நடக்கும் நான்கு வழிச்சாலைப் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. இந்த ஆண்டு ஜூலையில் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிட வாய்ப்புள்ளது.
ராஜபாளையம்-கொல்லம் நான்கு வழிச்சாலை பணிகள் மார்ச் அல்லது ஏப்ரலில் தொடங்கி விடும். 2 1/2 ஆண்டுகளில் இந்த பணிகள் முடிந்துவிடும். இந்த சாலைக்கான நிலம் 80 சதவீதம் கையகப்படுத்தப்பட்டுவிட்டது. இந்த சாலை ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ., தொலைவில் தொடங்கி சங்கரன்கோவில் சாலையை கடந்து புறநகர் பகுதி வழியாகவே சென்று சிவகிரியை தாண்டி தற்போது தென்காசிக்கு செல்லக்கூடிய சாலையில் இணைகிறது.
தென்காசிக்கு 25 கி.மீ-க்கு முன்பாக சொக்கம்பட்டியில் இருந்து பிரிந்து மேலபுளியரை வழியாக கொல்லம் செல்கிறது. மதுரை-கொல்லம் சாலையை தென்காசியுடன் இணைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்ததால் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம், சுமார் 6 கி.மீ. தொலைவுக்கு மதுரை-கொல்லம் நான்கு வழிச்சாலையில் இருந்து இணைப்பு நான்கு வழிச்சாலை அமைத்து, தென்காசி சாலையுடன் இணைக்கப்படும்’’ என்றார்.
5 ஆண்டுகளுக்கு முன்பே... - 2018-ம் ஆண்டு முதல் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் மதுரை-தென்காசி சாலையில் நான்கு வழிச்சாலைக்கு தேவையான போக்குவரத்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே கடந்து விட்டது. ஆனால், தற்போதுதான் மிக தாமதமாக மதுரை-கொல்லம் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது.
ராஜபாளையத்தில் உள்ள தொழிற்சாலைகளுடைய உற்பத்தி பொருட்கள், தமிழகத்தின் வடமாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் இந்த இருவழிச்சாலை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. அதுபோல், கேரளாவில் இருந்து மதுரை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள், சரக்குகள், இந்த சாலை வழியாக சென்று வருகின்றன.
தற்போது இந்த சாலையில் நிலவும் போக்குவரத்து பிரச்சினை களால், கேரளாவில் இருந்து ட்ரக்குகள், சரக்கு லாரிகள் திருவனந்தபுரம் வழியாக சுற்றிச் சென்று வருகின்றன. அதனால், பயணநேரமும், போக்குவரத்து செலவும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த மதுரை-கொல்லம் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டால் பயணிகள் போக்குவரத்தும், சரக்குப் போக்குவரத்தும் எளிதாக நடைபெற வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT