Published : 09 Jan 2025 04:33 PM
Last Updated : 09 Jan 2025 04:33 PM
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது குறித்து தற்போது எந்த விசாரணையும் நடத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளில் தீர்வு காணும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனு மீது தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்.
அப்போது இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு ஒரு முடிவுக்கு வர வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்கக் கூடாது எனக் கோரி முன்னாள் எம்பி-க்களான ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் கே.சி.பழனிசாமி ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தனர்.
இதேபோல பெங்களூரு வா.புகழேந்தி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சூரியமூர்த்தி ஆகியோரும் இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும், அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனக் கூறி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனுக்களின் அடிப்படையிலும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளரான பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பழனிசாமி தரப்பில் ஆஜரான டெல்லி மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம், “தற்போது அதிமுகவில் உறுப்பினர்களாக இல்லாத தனிப்பட்ட நபர்கள் கட்சி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனுக்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது” என்றார். அதை தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலனும் ஆமோதித்தார்.
தேர்தல் ஆணையத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்பதை ஏற்கெனவே சொல்லியிருக்க வேண்டியதுதானே என கண்டிப்பு தெரிவித்தனர். பின்னர் அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே உரிமையியல் வழக்குகள் தொடரப்பட்டு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் சூழலில், இதே விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த எந்த முகாந்திரமும் இல்லை.
எனவே, இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த விசாரணையும் நடத்தக் கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இது தொடர்பாக வரும் ஜன.27-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT