Published : 09 Jan 2025 04:19 PM
Last Updated : 09 Jan 2025 04:19 PM

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மிகப் பெரிய போராட்டம்: இந்து முன்னணி எச்சரிக்கை

சென்னை: ‘திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை எனக் கூறி மதக் கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் இஸ்லாமிய அமைப்புகளை எதிர்த்து, இந்து முன்னணி சார்பில் மக்களைத் திரட்டி மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்’ என்று அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றாகும். இந்தத் திருத்தலம் இருக்கும் மலையானது அகநானூற்றில் முருகன் குன்றம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, மதுரைக் காஞ்சி, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் இதன் சிறப்பைப் பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

திருப்பரங்குன்றம் மலை யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை வந்த பொழுது அந்த திருப்பரங்குன்றம் மலை முழுவதுமே திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குச் சொந்தமானது என லண்டன் பிரிவியூ கவுன்சில் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. இன்றும் அந்த தீர்ப்பு இருந்து வருகிறது.

அதன் அடிப்படையில் காலங்காலமாக மலை மேல் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது. தீபம் ஏற்றுவதை தடுத்த இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அரசு செயல்பட்ட காரணத்தால் 1996-ஆம் வருடம் உயர் நீதிமன்றத்தை அன்றைய பக்தர்கள் அணுகினர். அதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றமும் குன்றில் உள்ள தீபத்தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

இதன் பின்னரும் கூட இந்து சமய அறநிலையத் துறை, தீபத் தூனில் தீபம் ஏற்றாமல் மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றி வருகிறது. தீபத்தூணில் தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென இந்து முன்னணியும் இந்துக்களும் பலமுறை போராட்டம் நடத்தியும் அரசு அனுமதி அளிக்காமல் தடுத்து வருகிறது.

இந்நிலையில், எந்த உரிமையும் இல்லாத இஸ்லாமிய அமைப்புகள், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றும், அந்த மலையில் உள்ள தர்காவில் ஆடு வெட்டி கந்தூரி செய்வோம் என்றும் திட்டமிட்டு மதக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்கள். அதற்காக கோயிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி பொதுமக்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் செயல்பட்டு வருகிறார்கள். இந்த செயலை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

திட்டமிட்டு திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை எனக் கூறி அதில் ஆடு பலியிட முயற்சித்து மதக் கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் இஸ்லாமிய அமைப்புகளை எதிர்த்து இந்து முன்னணி சார்பில் மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்பதை அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x