Published : 09 Jan 2025 03:11 PM
Last Updated : 09 Jan 2025 03:11 PM

‘தமிழக உயர் கல்வி முறைக்கு பாதிப்பு’ - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழி உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்.

சென்னை: பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இரண்டு வரைவு நெறிமுறைகளையும், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வரைவு நெறிமுறைகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசின் கல்வித் துறையை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து தமிழக சட்டப் பேரவையில் பேசியது: “எல்லோரும் படித்து, எல்லோரும் வேலைக்குப் போய், எல்லோரும் தலைநிமிர்வது பிடிக்காதவர்களால் தொடர்ச்சியாக கல்வித் துறையில் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன.

பள்ளிக் கல்வியைச் சிதைப்பதற்காகவே புதிய தேசிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து திணிக்கிறார்கள். அரசுப் பொதுத் தேர்வு என்ற பெயரால் வடிகட்டி, வடிகட்டி அனைவரையும் கல்வியைத் தொடர முடியாமல் செய்யப் போகிறார்கள். அதனைத் தமிழக அரசு கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வு மூலமாக மருத்துவக் கனவைச் சிதைக்கும் காரியத்தை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார்கள். தங்கை அனிதா உள்ளிட்ட எத்தனையோ உயிர்களை நாம் இழந்தோம். ஆனால், ஆண்டுதோறும் ஆள்மாறாட்டம், வினாத்தாள் லீக், மதிப்பெண் குளறுபடி என்று எல்லா முறைகேடும் நடப்பதில் நம்பர் ஒன் தேர்வாக நீட் தேர்வு இருக்கிறது.

இதேபோல பல்கலைக்கழகங்களையும் சிதைக்கும் முயற்சியை மத்திய அரசு தொடங்கிவிட்டது. துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்படும் தேர்வுக் குழுவை ஆளுநரே தீர்மானிப்பார் என்று யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறை வகுத்துள்ளது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநர் கையில் கொடுப்பது, பல்கலைக்கழகங்களைச் சிதைக்கும் காரியமாகத்தான் முடியும். அதற்காகத்தான் இப்படிச் செய்யப் போகிறார்கள். இந்த விவகாரத்தில் ஏற்கெனவே தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் கருத்து மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது.

துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் தேர்வுக் குழுவில் யுஜிசி பரிந்துரை செய்யும் உறுப்பினர்களை ஆளுநர் நியமித்தார். நாம் அதனை ஏற்கவில்லை. இந்த மோதலுக்கு ஆக்கபூர்வமான தீர்வு எட்டப்படாத நிலையில், தன்னிச்சையாக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிக அதிகாரங்களை ஆளுநர்களுக்கு வழங்குவது சரியுமல்ல, முறையுமல்ல. இவர்களாக ஓர் உத்தரவைப் போட்டுவிட்டு, இதனை அமல்படுத்தாத கல்வி நிறுவனங்கள் யுஜிசி திட்டங்களில் பங்கேற்க முடியாது என்று சொல்வது அநியாயம் அல்லவா? அதுவும், பட்டங்களை வழங்க முடியாது என்பது பகிரங்கமான மிரட்டல் அல்லவா? வேறு எதை அது எடுத்துக்காட்டுகிறது?

மாநில அரசுகள் தங்கள் வளத்தில், பொருளாதார பலத்தில் கட்டிய பல்கலைக்கழகங்களை அபகரித்துக் கொள்கிற அக்கிரமமான முயற்சியாகவே இதனைக் கருத வேண்டி இருக்கிறது. இந்த விதிமுறை கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. மாநில உரிமைகளில் தலையிடுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைச் சிறுமைப்படுத்தும் செயல். மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவபர்களிடம் தான் கல்வி தொடர்பான அதிகாரம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான், அனைத்து மக்களுக்குமான கல்வியை முழுமையாகக் கொடுக்க முடியும்.

நியமனப் பதவிகளில் ஒருசில ஆண்டுகள் இருந்துவிட்டுப் போய்விடுபவர்களுக்கு ஒரு மாநில மக்களின் அடிப்படை உணர்வைப் புரிந்துகொள்ள இயலாது. மத்திய அரசு கல்வித் துறையில் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வது இல்லை.

வரம்பற்ற கட்டணம், இடஒதுக்கீடு இல்லாத தன்மை என வரம்பு மீறும் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு கடிவாளம் போடுவதற்கு சிறு துரும்பும் கிள்ளிப் போட மறுக்கும் மத்திய அரசு, தனது நிதிநிலை அறிக்கையில் உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டே வருகிறது.

கல்வித் துறை சார்பில் தமிழகத்தில் ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகம் (IIT, IIM, Central university) போன்ற ஒரேயொரு புதிய உயர் கல்வி நிறுவனத்தைக் கூட அமைக்காத மத்திய அரசு, ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோரது சட்டப்படியான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிய மத்திய அரசு; மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உ‌ள்ள பல்கலைக்கழகங்களை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்வது கெடுநோக்கம் கொண்டது; சுயநலமானது. நிச்சயமாக மாணவர் நலனை மனதில் கொண்டோ, கல்வித்தரத்தை மேம்படுத்தவோ இந்த முயற்சி நடைபெறவில்லை.

ஒரு தன்னாட்சி பெற்ற தனியார் கல்லூரியே பாடத்திட்டம் வகுத்துப் பட்டமும் வழங்கலாம் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டு, நூற்றாண்டு பெருமை கொண்ட கல்லூரிகளை அபகரிக்க எத்தனிப்பது அதிகார எதேச்சாதிகாரம். தலைசிறந்த கல்வி நிறுவனங்களை நாட்டிலேயே அதிக அளவில் கொண்டிருக்கும் தமிழகம், நமது கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது; அப்படி இருக்கவும் முடியாது.

கல்வியையும், மக்களையும் காக்க, எதிர்காலத் தலைமுறையைக் காக்க தமிழக சட்டமன்றத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியாக வேண்டும். இந்தத் தீர்மானத்தை ஏற்று மத்திய அரசு மனம் மாறாவிட்டால் மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் நாடுவோம்” என்ற தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.

தீர்மானம் விவரம்: “பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக சமீபத்தில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப்பெற வேண்டுமென இப்பேரவை கருதுகிறது. அதேபோல் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளில் கற்கை முறைகளுக்கான குறைந்தபட்ச வரைவு நெறிமுறைகள், 2024 மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியிட்ட வரைவு நெறிமுறைகள், 2025 ஆகியன தேசிய கல்விக் கொள்கை, 2020-ன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடான கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது மட்டுமல்ல; தமிழகத்தின் உயர் கல்வி முறைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது.

தமிழகத்தில் சமூக நீதிக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வலுவான உயர் கல்விக் கட்டமைப்பை இந்த வரைவு நெறிமுறைகள் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாலும், தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கடுமையாகப் பாதிக்கும் என்பதாலும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த இரண்டு வரைவு நெறிமுறைகளையும், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வரைவு நெறிமுறைகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசின் கல்வித் துறையை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” என்று தீர்மானத்தை கொண்டுவந்தார்.

இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாக தெரிவித்தனர். தீர்மானத்தை எதிர்த்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x