Published : 09 Jan 2025 01:01 AM
Last Updated : 09 Jan 2025 01:01 AM

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு யார் காரணம்? - திமுக - அதிமுக பரஸ்பர குற்றச்சாட்டால் பேரவையில் பரபரப்பு

டங்ஸ்டன் சுரங்கம் வருவதற்கு யார் காரணம் என்று சட்டப்பேரவையில் அதிமுக – திமுக உறுப்பினர்களிடையே கடும் விவாதம் நடைபெற்றது. பரஸ்பர குற்றச்சாட்டுக்களால் பேரவையில் பரபரப்பு நிலவியது.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதம்:

மதிமுக உறுப்பினர் மு.பூமிநாதன்: மதுரையில் டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வேண்டும். பலர் போராட்டங்களை தூண்டி விடுகின்றனர். டங்ஸ்டன் சுரங்கம் வராது என்பதை மக்களுக்கு விளக்க அரசு கூட்டம் நடத்த வேண்டும்.

அதிமுக உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா: டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் வராது என்று முதல்வர் தெரிவித்தார். சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னரும் மதுரை மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். டங்ஸ்டன் சுரங்கம் மதுரையில் வரக்கூடாது. அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து மக்களின் நம்பிக்கையை எடுக்க வேண்டும்.

தமிழக வாழ்வுரிமை கட்சி உறுப்பினர் தி.வேல்முருகன்: டங்ஸ்டன் சுரங்கத்தை திட்டமிட்டு கொண்டு வந்து தென்மாவட்ட மக்களின் எதிர்ப்பை தமிழக அரசு பக்கம் தள்ளிவிடும் முயற்சியை மத்திய அரசு இறங்கியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மா.சின்னதுரை: டங்ஸ்டன் சுரங்கம் தடுக்கப்பட வேண்டும்.

பாமக உறுப்பினர் அருள்: டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பேரணியாக சென்றுள்ளனர். அப்படி என்றால் மக்களுக்கு இருக்கும் சந்தேகம் இன்னும் அரசால் தீர்க்கப்படவில்லை.

இந்த கவனஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

அரிய வகை கனிமங்களை ஏலம் வி்டும் மாநில அரசின் உரிமையை பறிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தபோது உங்கள் கட்சி (அதிமுக) மாநிலங்களவை உறுப்பினர் ஆதரவு அளித்தார். மதுரை டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கும் பிரச்சினைக்கு இதுதான் நதி மூலம், ரிஷிமூலம், மூலகாரணம் ஆகும் என்று அவர் பேசினார். உடனே அந்த பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, 'இந்த விவகாரத்தில் அதிமுக உறுப்பினர் அரசை குற்றச்சாட்டும்போது இப்பிரச்சினை எங்கு தொடங்கியது என்பதை தெரிவிக்க வேண்டியது எனது கடமை. இந்த சட்டத்தை நாங்கள் எல்லா வகையிலும் எதிர்த்தோம். நீங்கள்தான் ஆதரித்தீர்கள். ஆனால், "நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கத்தை வரவிடமாட்டேன்" என்று இப்பேரவையில் நெஞ்சுரத்தோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைவரின் ஒப்புதலோடு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்பிறகும்கூட அதிமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது. நீங்கள் செய்த தவறை மறைப்பதற்காக இங்கு முகக்கவசம் அணிந்து வந்து இருக்கிறீர்கள்' என்றார்.

அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு, “டங்ஸ்டன் தீர்மானத்தை நீங்கள் ஆதரித்தது உண்மைதான். அதற்காக நாங்கள் நன்றி சொல்கிறோம். அதை மறுக்கவில்லை. ஆனால் உங்கள் உறுப்பினர் பேசும்போது இந்தப் பிரச்சினையால் அரசு மக்கள் மத்தியில் மதிப்பை, நம்பிக்கையை இழந்து கொண்டிருக்கிறது என்று கூறினார். அதனால்தான் அதற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் அமைச்சருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலங்களவையில் உங்கள் உறுப்பினர் என்ன பேசினார்? அதை இல்லை என்று சொல்கிறீர்களா, மறுக்கிறீர்களா? மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் தம்பிதுரை ஆதரித்து பேசியுள்ளார். அதுதொடர்பான ஆதாரத்தை பேரவைத் தலைவரிடம் கொடுக்கிறேன். நீங்களும் உங்களிடம் உள்ள ஆதாரத்தைக் கொடுங்கள். அதன்பிறகு முடிவெடுக்கலாம்" என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார்: ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பேசியதாலே இது வந்தது என்று சொல்கிறீர்கள். 38 திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் தடுக்கத் தவறியதை ஒரு மாநிலங்களவை உறுப்பினர் செய்தார் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: திமுக சார்பில் எதிர்த்திருக்கிறோம். ஆதரிக்கவில்லை. அதிமுக உறுப்பினர் ஆதரித்து பேசியிருக்கிறார். அது உண்டா, இல்லையா? அதற்கு பதில் சொல்லுங்கள்.

பேரவைத் தலைவர் மு.அப்பாவு: முதல்வர் அவரிடம் இருக்கும் ஆதாரத்தை தருவதாக சொல்லியுள்ளார். நீங்கள் உங்களிடம் உள்ள ஆதாரத்தை தாருங்கள். பின்னர் முடிவு பண்ணுவோம்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: டங்ஸ்டன் சுரங்கத்துக்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது. இத்திட்டத்தை வர விடமாட்டோம். முதல்வர் இருக்கும் வரை ஒரு பிடி மண்ணைக்கூட எடுக்க தமிழக அரசு அனுமதிக்காது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x