Published : 09 Jan 2025 12:13 AM
Last Updated : 09 Jan 2025 12:13 AM
ஈரோடு: ஈரோடு கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில், வருமானவரித் துறையினர் 2-வது நாளாக நேற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
ஈரோடு பூந்துறை சாலையில் உள்ள செட்டிபாளையம் என்ற இடத்தில் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் உள்ளது. இந்த கட்டுமான நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் காலை, கோவையில் இருந்து வந்த வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
கஸ்பாபேட்டை பகுதியில் உள்ள ராமலிங்கத்தின் வீடு, முள்ளாம்பரப்பு பகுதியில் செயல்பட்டு வரும் செல்வசுந்தரம் என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவன தலைமை அலுவலகம் மற்றும் ரகுபதிநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலும் இரண்டாம் நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை - அந்தியூர் சாலையில் பூனாச்சி அருகேயுள்ள, மரவள்ளிக்கிழங்கு அரவை ஆலையிலும் இரண்டாவது நாளாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை நடந்த இடங்களில் வெளியாட்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. கட்டுமான நிறுவன உரிமையாளர் மற்றும் மரவள்ளி அரவை ஆலை உரிமையாளர் ஆகியோர், எதிர்கட்சித்தலைவர் பழனிசாமியின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT