Published : 09 Jan 2025 12:09 AM
Last Updated : 09 Jan 2025 12:09 AM
வேலூர்: அமலாக்கத்துறை சோதனை முடிவடைந்த நிலையில், விசாரணைக்காக ஜன. 22-ல் சென்னை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த்துக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீடு மற்றும் இவரது மகனும் வேலூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான கதிர் ஆனந்த் நடத்தி வரும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 4 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அண்மையில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்ட 2 இடங்களில் 8 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் ரூ.28 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் ஜன.4-ம் தேதி நள்ளிரவு வரை 44 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் பெரும் தொகை ஒன்றை பறிமுதல் செய்ததுடன் ஆவணங்கள், கம்ப்யூட்டர் ஹார்டுடிஸ்க் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் 2-ம் கட்டமாக 5 பேர் அடங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் (ஜன.7-ம் தேதி) மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர். அதில், கல்லூரியில் 2 அறைகளுக்கு வைக்கப்பட்ட‘சீலை’அகற்றி நேற்று அதிகாலை 2.30 மணி வரை சோதனை நடத்தினர். கல்லூரியின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து வெளிநபர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலை நகல் எடுத்துச் சென்றதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையில், சோதனை முடிந்த பிறகு திமுக பிரமுகர்கள் வன்னியராஜா, சுனில்குமார், வழக்கறிஞர் பாலாஜி ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் ஒன்றை கொடுத்து சென்றுள்ளனர். அதில் கதிர் ஆனந்த் ஜன. 22-ம் தேதி சென்னை அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT