Published : 08 Jan 2025 08:44 PM
Last Updated : 08 Jan 2025 08:44 PM

‘தமிழரசனை மட்டும் குறிவைத்து போலீஸ் இழுத்துச் சென்றது ஏன்?’ - சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்

மதுரை: டங்ஸ்டன் போராட்டத்தில் போலீஸாரின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது என்று மதுரை எம்பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ தள பதிவில் கூறியது: “டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டதை முழுமனதாக மேலூர் மக்கள் வரவேற்றுள்ளனர். நேற்று நடந்த பேரணியுமே இத்திட்டத்தை முழுமையாக ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடுதான் நடந்தது.

இப்படியான நிலையில் நேற்று நடந்த பேரணியில் டிஒய்எஃப்ஐ-யின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் தமிழரசனை மட்டும் காவல்துறை குறிவைத்து இழுத்துச் சென்றது ஏன்? மேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இத்திட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்து மக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர் தமிழரசன்.

சமீபத்தில் டிஒய்எஃப்ஐ நடத்திய 3 நாள் நடைபயணத்தின் பொறுப்பாளர் அவர். ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய பேரணியில் அவரை மட்டும் வலுக்கட்டாயமாகத் தாக்கி, இழுத்துச் சென்று காவல் துறை வாகனத்தில் ஏற்ற முயன்றது ஏன்? அப்போது அங்கிருந்த மக்கள் தமிழரசனை காவல்துறையிடமிருந்து மீட்டிருக்காவிட்டால் காவல்துறை தமிழரசனை என்ன செய்திருக்கும் என்ற கேள்விகள் எழுகின்றன.

காவல் துறையின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x