Published : 08 Jan 2025 05:55 PM
Last Updated : 08 Jan 2025 05:55 PM
விழுப்புரம்: “யார் அந்த சார் என கேட்டால் திமுகவுக்கு ஏன் கோபம் வருகிறது. குற்றவாளி யார் என கண்டுபிடித்து மக்களுக்கு சொல்லுங்கள். திமுகவினருக்கு தொடர்பு இல்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும்?” என்று அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக எதிர்க்கட்சியினர் பல்வேறு விதமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்திலும் “யார் அந்த சார்” என்ற பேட்ஜ்-களை சட்டையில் அணிந்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம், தனது வீட்டில் இருந்த கட்சி நிர்வாகிகளின் பைக்குகளில் “யார் அந்த சார்” ஸ்டிக்கரை ஒட்டினார்.
இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சி.வி. சண்முகம் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியது: “திராவிட மாடல், சமூக நீதி என பேசும் திமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளிடம் குறைந்த அளவில் கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. குறிப்பாக சாதியை அறிந்து, கரும்பு கொள்முதல் செய்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சாதி வன்முறை அதிகமாக உள்ளது. மேலும் சாதி வன்கொடுமை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் உள்ளது என திமுக-வின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், சாதியை அறிந்து கரும்பு கொள்முதல் செய்வது வன்மையாக கண்டிக்கத்தது.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம். மாநில உரிமைகள் விட்டுக்கொடுக்கப்படுகிறது. பறிக்கப்படுகிறது. மத்திய அரசு பல்கலைக்கழக மாநில குழு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மாநில உரிமை முற்றிலுமாக பறிக்கப்படுகிறது. மாநில அரசு சார்பில் உறுப்பினர்களை நியமிக்க முடியாது. மத்திய அரசு மோசமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. மத்திய அரசு தனது அதிகார துஷ் பிரயோகத்தை செயல்படுத்தி வருகிறது.
மேலும் ஆசிரியர் அல்லாதவரும் துணை வேந்தவர் பதவிக்கு நியமிக்கலாம் என புதிய விதி உருவாக்கப்பட்டது. தற்போது தொழில்துறையை சேர்ந்தவர்களும் துணை வேந்தராக வரலாம் என கொண்டு வரப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் பத்து சதவீத இடம் தனியாருக்கும், மேலும் பத்து சதவீதம். அவுட்சோர்சிங் முறையில் ஆட்கள் நியமிக்கப்படவுள்ளது.
இது இடஒதுக்கீடு முறைக்கு எதிரான நடவடிக்கை. குறிப்பாக கல்வித்துறையில் எடுக்கும் நடவடிக்கைக்கு என்ன காரணம்.? மறைமுகமாக இந்தி திணிப்பையும், மத்திய அரசின் கொள்கையை நேரடியாக திணிக்கவும் முயற்சி செய்கிறனர். தேர்ந்தெடுக்கப்படாத ஒருவருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
அதிமுக 32 ஆண்டு ஆட்சியில் தமிழகத்தின் உரிமைகள் காப்பாற்றப்பட்டது. திமுகவின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள்? மாநில உரிமை பறிக்கப்படும் போது திமுக அரசு எதிர்ப்பது போல வேடம் போடுகிறது. பல்கலைக்கழகம் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கை மாநில அரசு மீது தொடுக்கும் யுத்தமாகும்.
ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் மொழியை அழிக்க வேண்டும் அதனை மத்திய அரசு செய்து வருகிறது. இதனை திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது. இதனை எதிர்த்து திமுக அரசு உண்மையாக போராட வேண்டும். தேர்தல் ஆனையம் வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. போலி வாக்களர், இரட்டை வாக்காளர், இறந்தவர்களை நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம்.
ஆனால் இதனை செய்யவில்லை. விழுப்புரம் 6-வது வார்டில் பாகம் 140-ல் 488 வாக்குகள் உள்ளன. ஆனால் உண்மையான வாக்காளர்கள் 24 பேர் தான். 464 வாக்காளர் இல்லை. இதனை சரி செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீக்க மனு கொடுத்தால் மனுவை பெறுவதில்லை. இது பித்தலாட்ட வாக்காளர் பட்டியலாகும்
பல்கலைக்கழக மானிய குழு விதிமுறைகள் தொடர்பான மத்திய அரசின் திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். யார் அந்த சார்? என கேட்டால் ஏன் திமுகவுக்கு ஏன் கோபம் வருகிறது. குற்றவாளி யார் என கண்டுபிடித்து மக்களுக்கு சொல்லுங்கள். திமுக-வினருக்கு தொடர்பு இல்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT