Published : 08 Jan 2025 04:44 PM
Last Updated : 08 Jan 2025 04:44 PM
கடலூர்: “திமுக எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டுமா? இவ்வளவு பொய் பேச வேண்டுமா என்று அவர் படிக்காமல் சென்றுவிட்டார்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
வடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் இன்று ( ஜன.8) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “அண்ணா பல்கலை.யில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மாணவியின் தகவல்கள் வெளிவந்த நிலையில் இதுவரை குற்றவாளியின் வாக்குமூலம் என்ன, அவரது பின்புறம் என்ன என்பது குறித்து தகவல் வெளியிடாதது ஏன்?
ஆளுநரை எதிர்த்து நீங்கள் போராடுவதே மற்ற போராட்டங்களையும் பிரச்சினைகளையும் திசை திருப்புவதற்குதான். உங்கள் உரையை நீங்களே எழுதிக் கொள்வீர்களா? நீங்கள் எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டுமா, இவ்வளவு பொய் பேச வேண்டுமா என்று அவர் படிக்காமல் சென்று விட்டார். நீங்கள் எழுதி கொடுத்ததை படிப்பதற்கு அவர் திமுகவிலேயே சேர்ந்துவிடலாம்.
பொங்கல் பரிசு என்பது முதலில் ரூ 5,000 ஆகவும் பிறகு ரூ.2,500 ஆகவும் பிறகு 1,000 ஆகவும் இருந்தது. தற்பொழுது ரூ.103-க்கு வந்துள்ளது. அது ரூ.3-க்கு வரும். முன் நாம் விழித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நெற்றியில் ஒற்றை ரூபாயை ஒட்டி புதைத்து விடுவார்கள். மற்றவர்களின் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கிறீர்கள், ஆனால் நீங்கள் ஆளுநரை எதிர்த்து நினைத்த இடத்தில் போராட்டம் நடத்துகிறீர்கள். ஆளுநர் செய்த செயல் போராடும் அளவிற்கு குற்றம் என்றால் மாணவி பாதிக்கப்பட்டதுக்கு போராட வேண்டிய அவசியம் இல்லையா? ஏன் அதற்கு அனுமதி மறுக்கிறீர்கள்.
வடலூர் வள்ளலார் பெருவெளியில் மக்கள் நின்று தரிசனம் செய்யக்கூடிய இடத்தில் ஆராய்ச்சி மையம் கட்டுவது ஏற்புடையது அல்ல. வள்ளலாருக்கு நீங்கள் பண்பாட்டு மையம் கட்டுவதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதை வேறு இடத்தில் செய்ய வேண்டும்.
இந்த அரசு எப்பொழுதுமே வேண்டும் என்பதை செய்வதில்லை. எதை வேண்டாம் என்று சொல்கிறோமோ அதைத்தான் செய்கிறது. பெருவெளியில் ஆராய்ச்சி மையம் கட்ட முடியாது, டங்ஸ்டன் சுரங்கம் தோண்ட முடியாது விடமாட்டோம். இறுதியாக ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக வேட்பாளர் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படுவர்” என்றார். முன்னதாக அவர் சத்திய ஞான சபை, அணையா அடுப்பு, தெய்வ நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு தெய்வ நிலையத்தில் வள்ளலார் தரிசனம் செய்தார் .
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT