Published : 08 Jan 2025 04:17 PM
Last Updated : 08 Jan 2025 04:17 PM
சென்னை: “அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை, உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த 103-வது வட்டச் செயலாளர் சுதாகர் என்பவரையும், பெண் காவல் ஆய்வாளர் ராஜீ என்பவரையும் நேற்று (ஜன.7) கைது செய்து, அவர்கள் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில், அண்ணாநகரில் நடைபெற்ற பாலியல் சம்பவம் தொடர்பான வழக்கில் எடுக்கப்பட்ட கைது நடவடிக்கை குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “அண்ணாநகர் வழக்கைப் பொறுத்தவரையில், பத்து வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களது உறவினரான இளஞ்சிறார் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி தங்களைத் தவறாக நடத்தியதாகவும், குற்றம் செய்த சதீஷ் என்பவரைக் கைது செய்யவில்லை என்றும் சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இவ்வழக்கு கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளருக்கு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் குற்றம் சாட்டப்படுகிற சதீஷும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், உயர் நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது.
இந்த உத்தரவை எதிர்த்து காவல் துறை செய்த மேல்முறையீட்டில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்ற முடிவுக்கு வந்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு காவல் துறையிலிருந்தே மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு இப்போது இந்த வழக்கில் அதிமுக-வைச் சேர்ந்த 103-வது வட்டச் செயலாளர் சுதாகர் என்பவரையும், பெண் காவல் ஆய்வாளர் ராஜீ என்பவரையும் நேற்று கைது செய்து, அவர்கள் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சுதாகர் அதிமுக-வில் வட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். அவரையும் காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள். காவல் ஆய்வாளர் பொறுப்பில் இருக்கிற ஒருவரையும் கைது செய்திருக்கிறார்கள்.
நான் முன்பு விளக்கம் சொல்லிய சென்னை மாணவி வழக்கில் கைது செய்யப்பட்டவர், நிச்சயமாக, உறுதியாகச் சொல்கிறேன். அவர் திமுகவில் உறுப்பினராக இல்லை. திமுக ஆதரவாளர். அதை நாங்கள் மறுக்கவில்லை. அமைச்சர்களுடன், அரசியல்வாதிகளுடன் புகைப்படம் எடுத்திருக்கலாம். அது தவறில்லை. ஆனால், யாராக இருந்தாலும், திமுக-வினராக இருந்தாலும், நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அவர் திமுக உறுப்பினர் அல்ல. திமுக அனுதாபி. அதுதான் உண்மை. எது எப்படியிருந்தாலும், குற்றவாளியை நாங்கள் காப்பாற்றவில்லை.
உடனடியாகக் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளதோடு, குண்டர் சட்டத்திலும் அடைத்திருக்கிறோம். எனது அரசைப் பொறுத்தவரையில், எந்தக் கட்சியாக இருந்தாலும், எந்த தனிப்பட்ட நபராக இருந்தாலும் சரி, ஏன் காவல் துறையாக இருந்தாலும் சரி, பெண்களின் பாதுகாப்புதான் முக்கியமே தவிர, நாங்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை.
ஆகையால், எதிர்க்கட்சியினரை நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, குற்றச்செயல் எதுவாக இருந்தாலும், குற்றவாளி யாராக இருந்தாலும், நேர்மையாக, நியாயமாக, கடுமையாக நடவடிக்கை எடுத்து வரும் இந்த அரசைக் குறை கூறாமல், பெண்களின் பாதுகாப்புக்கு தங்களால் இயன்ற ஒத்துழைப்பை நீங்கள் அனைவரும் இந்த அரசுக்கு வழங்கிட வேண்டும்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT