Last Updated : 08 Jan, 2025 03:02 PM

 

Published : 08 Jan 2025 03:02 PM
Last Updated : 08 Jan 2025 03:02 PM

நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் கிராமங்கள் இணைப்பு: கருத்து தெரிவிக்க 120 நாள் அவகாசம் - அமைச்சர் நேரு தகவல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் ஊரக உள்ளாட்சிகளை இணைப்பது குறித்து கருத்து தெரிவிக்க 120 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால் முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், ''கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளை இணைக்கும் திட்டத்தில், நலத்திட்டங்கள் கிடைக்காது என்ற அடிப்படையில் கிராமங்களே ஒன்று திரண்டு அரசுக்கு மனுக்களை தருகின்றனர். இதை நிறுத்தி வைக்க முதல்வருடன் கலந்து பேசி நல்ல தீர்வை அமைச்சர் காண வேண்டும்'' என்றார்.

இதற்கு, அமைச்சர் கே.என்.நேரு அளித்த பதில்: ''தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இதில், மாநகராட்சி, நகராட்சிகளுடன் இணைப்பது, பேரூராட்சிகளாக உருவாக்குவது என்பது வெறும் 371 ஊராட்சிகள் மட்டும்தான். அதில் கூட, 120 நாட்கள் நேரம் அளிக்கப்பட்டுள்ளது. பிரச்சினை இருந்தால் அதை மாவட்ட ஆட்சியரிடம் கூறி, அவர்கள் மூலம் அரசுக்கு அனுப்பினால், எந்த ஊரை சேர்க்கலாம், கூடாது என்பதை முடிவெடுக்கலாம். எந்த பகுதியிலும், மாநகராட்சியுடன் இணைப்பதற்கு பிரச்சினை செய்வதில்லை.

புதிய பேரூராட்சி தொடங்கப்பட்டால், 100 நாள் வேலை திட்டம் பறிபோகும் என்பதால் எதிர்க்கப்படுகிறது. பல ஊராட்சிகளில் விளைநிலங்கள் இல்லாத இடங்களை மட்டுமே நகராட்சியுடன் இணைக்கிறோம். குறிப்பாக மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, இரண்டு அல்லது மூன்று கூட்டங்கள் நடத்தப்பட்ட பின்னரே அடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 371 ஊாராட்சிகள் மட்டுமே இணைக்கப்படுகிறது. அதிலும் விருப்பமில்லை என்றால் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தால், மீண்டும் பரிசீலிக்கப்பட்டு முதல்வரிடம் கலந்து பேசி தக்க முடிவெடுக்கப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.

அதேபோல், திருவண்ணாமலைக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் தரும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி வலியுறுத்தியதற்கு, பதிலளித்த அமைச்சர் நேரு,''மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க தாமதமாகிறது. இத்திட்டத்துக்கு 2 ஆண்டு காலம் நீட்டிப்பு வழங்கி, பணம் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்காக திட்டத்தை செயல்படுத்துகிறோம். மத்திய அரசு நிதி, நபார்டு மற்றும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜைகா) மூலம் நிதியை தேடி காத்திருக்கிறோம். விரைவில் தொடங்கப்படும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x