Published : 08 Jan 2025 07:40 AM
Last Updated : 08 Jan 2025 07:40 AM
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருவிழா களைக்கு மாறி இருக்கிறது ஈரோடு. “ஈரோடு கிழக்கில் யார் போட்டியிடுவது என்பது குறித்து காங்கிரஸ் கட்சியுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் முன்பே தெரிவித்துள்ளார்.
பெரியாரின் குடும்பம் என்ற வகையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குடும்பத்தினரை, முதல்வர் ஸ்டாலின் மிகுந்த வாஞ்சையுடன் அணுகுகிறார். திருமகன் ஈவெரா, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் வேட்பாளர் ஆக்கப்பட்ட போதும், அவர்கள் மறைவின் போதும் அது வெளிப்பட்டது.
இதனால், இளங்கோவனின் இளைய மகனான சஞ்சய் சம்பத் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் உள்ளூர் அமைச்சர் முத்துசாமியின் விருப்பமும் இதுவாகவே உள்ளது. ஆனால், ஈவிகேஎஸ் குடும்பத்தினர், சஞ்சய் சம்பத்தை நிறுத்த ஆர்வப்படவில்லை என்கிறார்கள். அதேசமயம், “காங்கிரசிடமிருந்து ஈரோடு கிழக்கை திமுக தட்டிப்பறிக்காது” என நம்பிக்கை தெரிவித்தாலும், “ஈரோடு கிழக்கில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்” என்று தான் சொல்லி இருக்கிறார் செல்வப்பெருந்தகை.
சஞ்சய் சம்பத்திற்கு ராஜ்யசபா சீட் கொடுத்து, பெரியாரின் குடும்பத்தை, தொடர்ந்து தேசிய அரசியலில் வைத்திருக்கலாம் என்ற கருத்தை முன் வைக்கும் மூத்த திமுக நிர்வாகிகள், இடைத் தேர்தலில் திமுக போட்டியிட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக இடைத் தேர்தலில் பெருவெற்றியை பெற வேண்டிய கட்டாயம் திமுக-வுக்கு உள்ளது.
சென்ற இடைத் தேர்தலில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வென்ற நிலையில், இம்முறை அந்த வாக்கு வித்தியாசம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஆளும் கட்சிக்கு உள்ளது. அப்படி இருக்கையில், விருப்பமில்லாத சஞ்சய் சம்பத்தை நிறுத்துவது சரிப்பட்டு வருமா என்ற கேள்வியும் திமுக-வினருக்கு இருக்கிறது.
ஒருவேளை, திமுக போட்டியிட்டால் இங்கு கணிசமாக உள்ள முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவரே நிறுத்தப்படலாம். 2011 தேர்தலில் இங்கு வெற்றி பெற்று தேமுதிக எம்எல்ஏ-வாக இருந்த சந்திரகுமார், அடுத்த தேர்தலில் (திமுக-வில் இணைந்து) தோல்வியைத் தழுவினார்.
2021-ல் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதால் பறிபோன வாய்ப்பு மீண்டும் தனக்கு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் சந்திரகுமார். மாவட்ட திமுக துணைச் செயலாளர் செந்தில்குமார், இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், மாநகர செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பெயர்களும் வேட்பாளர் லிஸ்ட்டில் அடிபடுகிறது.
அதிமுக இடைத் தேர்தலை புறக்கணிக்கும் முடிவில் இருக்கிறது. இதனால் என்டிஏ கூட்டணியில் இங்கு ஏற்கெனவே போட்டியிட்ட அனுபவம் கொண்ட தமாகா மாநில பொதுச்செயலாளர் யுவராஜாவை நிறுத்த பாஜக விரும்புகிறது. ஆனால், இதற்கு வாசன் தரப்பில் மறுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
இதனால், அதிமுக வாக்குகளையும் ஈர்க்கக் கூடிய ஸ்டார் வேட்பாளரைத் தேடி வருகிறது பாஜக தலைமை. வழக்கப் போல தனித்து போட்டியிடும் நாதக-வும் இங்கே இம்முறை பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளதுகட்சிகளுக்குள் இப்படியான சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்க, “சட்டுப் புட்டுன்னு களத்துக்கு வாங்கப்பா” என்று அவசரப்படுகிறார்கள் ஈரோடு கிழக்கின் வாக்காளர்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT