Published : 07 Jan 2025 03:42 PM
Last Updated : 07 Jan 2025 03:42 PM
காங்கிரஸ் மேயருக்கும் துணை மேயர் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்களுக்கும் நடந்து வரும் பரஸ்பர குஸ்திகளால் கும்பகோணம் மாநகராட்சி பரபரத்துக் கிடக்கிறது. கும்பகோணம் மாநகராட்சியில் மேயராக காங்கிரஸ் கட்சியின் க.சரவணனும் துணை மேயராக மாநகர திமுக செயலாளர் சுப.தமிழழகனும் பதவியில் உள்ளனர்.
இந்த நிலையில், மாமன்றக் கூட்டங்களுக்கான அஜெண்டாவில் தீர்மானப் பொருள்களை சேர்ப்பது தொடர்பாக மேயருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கூட்டத்துக்கு கூட்டம் பிரச்சினை வெடித்து வருகிறது. டிசம்பர் 30-ம் தேதி நடந்த கூட்டத்திலும், “தீர்மானங்கள் தொடர்பான கோப்புகளைக் காட்ட வேண்டும்” என திமுக கொறடா தட்சிணாமூர்த்தி உள்ளிட்டவர்கள் கூச்சலிட்டனர்.
இதற்கு, கோப்புகளை நாளை வழங்குவதாகச் சொல்லிவிட்டு தனது அறைக்குச் செல்ல எழுந்தார் மேயர். அப்போது தட்சிணாமூர்த்தி, ஓடிச்சென்று மேயரின் அறை வாசலில் வழியை மறித்து படுத்துக் கொண்டு, “பதில் சொல்லிட்டுப் போங்க” என குரல் கொடுத்தார். பதில் பேசாத மேயர், அவரை தாண்டிக் குதித்துச் செல்ல முயன்றார்.
அப்போது, “ஐயோ... மேயர் என்னைக் கொல்றாரு” என அலறினார் தட்சிணாமூர்த்தி. பதிலுக்கு மேயரும், “ஐயோ... எனக்கு நெஞ்சு வலிக்குதே” என தரையில் அங்கியுடன் படுத்து உருண்டு கதறினார். உடனே, தட்சிணாமூர்த்தி தனக்கும் நெஞ்சு வலிப்பதாக சொல்லவே, இருவரும் பாரபட்சமில்லாமல் மருத்துவமனையில் ‘நெஞ்சுவலி சிகிச்சை’க்காக அட்மிட்டாகினர்.
இதைத் தொடர்ந்து, துணை மேயர், அவரது ஓட்டுநர், தட்சிணாமூர்த்தி இந்த மூவர் தான் எனது நெஞ்சு வலிக்குக் காரணம் என 31-ம் தேதி போலீஸில் புகாரளித்தார் மேயர். பதிலுக்கு தட்சிணாமூர்த்தியும் போலீஸில் புகாரளித்தார். இந்த களேபரங்கள் இரண்டு கட்சிகளின் தலைமைக்கும் எட்டியதை அடுத்து, 1-ம் தேதி அமைச்சர் கோவி.செழியன் இருதரப்பையும் அழைத்து சமாதானம் பேசினார். அதை ஏற்று இரு தரப்பும் சமாதானம் ஆனது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மேயர் சரவணன், “நான் மேயராக பொறுப்பேற்ற நாளிலிருந்து திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார்கள் கூட்டத்தை சுமுகமாக நடத்தவிடமாட்டார்கள். என்னை பேசவிடாமல் குறுக்கே குறுக்கே பேசி கூச்சல் போட்டு திசை திருப்புவதே அவர்களுக்கு வழக்கமாகிவிட்டது. 30-ம் தேதி கூட்டத்தின் போது திமுக கொறடா தட்சிணாமூர்த்தி நெஞ்சில் கையால் குத்தி தள்ளியதால் தான் எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
வலியால் நான் தவித்த போது ஆணையர் உள்ளிட்ட அலுவலர்கள் அத்தனை பேரும் வேடிக்கை பார்த்தனர். திமுக-வைச் சேர்ந்த சோடா கிருஷ்ணமூர்த்தி தான் என்னைத் தூக்கி பாதுகாப்பாக அழைத்துச் சென்று அமரவைத்தார். அதன் பிறகுதான் போலீஸில் புகாரளித்தேன். இனி வரும் கூட்டங்களில் திமுக-வினரின் குறுக்கீடு இருக்காது என அமைச்சர் சமாதானம் சொன்னதால் புகாரை வாபஸ் பெற்று விட்டேன்” என்றார்.
துணை மேயர் சுப.தமிழழகனோ, “மேயரை நான் எந்தத் தொந்தரவும் செய்யவில்லை. அவருக்கும் தட்சிணாமூர்த்திக்கும் கைகலப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அந்த இடத்திற்குச் சென்றேன். ஆனால், நாங்கள் அவருக்கு நெருக்கடி தருவதாகச் சொல்கிறார்.
நாங்கள் அவருக்கு எந்த விதத்தில் நெருக்கடி தருகின்றோம் என்று கூறினால் நேருக்கு நேராக விவாதிக்க தயாராக இருக்கிறோம். இது தொடர்பாக இரண்டு கட்சிகளின் தரப்பிலும் பேசி முடிக்கப்பட்டு விட்டதால் இதற்கு மேல் இதை விவாதிக்க விரும்பவில்லை” என்றார். திமுக கொறடா தட்சிணாமூர்த்தி நம்மிடம், “மேயர் என்னை தாக்கியதால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன்.
ஒப்பந்ததாரர்கள் தன்னை வந்து பார்த்தால் தான் தீர்மானப் பொருளில் கையெழுத்திடுவேன் என்று மேயர் கூறுவது உண்மை. அவர் தனது பதவியைத் துஷ்பிரயோகம் செய்து வருகிறார். மக்கள் பணியாற்றி வரும் என்னை காழ்ப்புணர்ச்சியுடன் மேயர் பேசுவது வேதனையாக உள்ளது என கண் கலங்கினார்” அமைச்சர் தலையிட்டதால் இருதரப்பும் தற்காலிகமாக வெள்ளைக் கொடி வீசி இருக்கிறது. இது எத்தனை நாளைக்கு பறக்கிறது என்று பார்க்கலாம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...