Published : 07 Jan 2025 06:20 AM
Last Updated : 07 Jan 2025 06:20 AM
சென்னை: சுற்றுலாத் துறை சார்பில் 10-வது சர்வதேச பலூன் திருவிழா சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய நகரங்களில் ஜனவரி 10-ம் தேதி தொடங்குகிறது. இத்திருவிழாவில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள் கொண்டுவரப்பட்டு பறக்கவிடப்படுகின்றன.
தமிழக அரசின் சுற்றுலாத் துறை, தனியார் அமைப்புடன் இணைந்து ஆண்டுதோறும் சர்வதேச பலூன் திருவிழாவை விமரிசையாக நடத்தி வருகிறது. பலூன் திருவிழாவுக்காக வெளிநாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள் கொண்டுவரப்பட்டு பறக்கவிடப்படும். இந்த நிகழ்வை காணவும், பலூன்களில் ஏறி பயணம் செய்யவும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலூன் திருவிழாவில் கூடுவார்கள்.
அந்த வகையில் தமிழக அரசின் சுற்றுலா துறை மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனம் சார்பில் 10-வது சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட உள்ளது. வழக்கமாக பொள்ளாச்சியில் மட்டும் பலூன் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு முதல்முறையாக பொள்ளாச்சி மற்றும் சென்னை, மதுரை நகரங்களிலும் பலூன் திருவிழா நடைபெற உள்ளது. இதில் இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம், ஜப்பான், தாய்லாந்து , வியட்நாம் உள்ளிட நாடுகளில் இருந்து வெப்ப காற்று பலூன்களும், குழந்தைகளை கவரும் வகையில் பிரேசில், ஆஸ்திரியா, இங்கிலாந்து நிாடுகளில் இருந்து சிறுத்தை, ஓநாய், யானை உருவங்கள் கொண்ட பலூன்களும் பறக்க விடப்படுகின்றன.
ஜனவரி 10 முதல் 12-ம் தேதி வரை சென்னை கிழக்கு கடற்கரைச்சாலை கோவளம் அருகேயுள்ள திருவிடந்தையிலும் , ஜனவரி 14 முதல் 16-ம் தேதி வரை பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி ரைட் கொங்கு சிட்டியிலும், ஜனவரி 18 மற்றும் 19-ம் தேதி மதுரையில் கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கத்திலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT