Published : 07 Jan 2025 06:04 AM
Last Updated : 07 Jan 2025 06:04 AM
சென்னை: சென்னையில் நேற்று வெளியிடப்பட்ட சென்னை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, வாக்காளர் எண்ணிக்கை 40 லட்சத்து 15 ஆயிரத்து 878 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் கடந்த அக்.29 முதல் நவ.28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற்றது. பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன், ரிப்பன் மாளிகையில் நேற்று வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் பட்டியலை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை வாக்காளர்களின் எண்ணிக்கை 40 லட்சத்து 15 ஆயிரத்து 878 ஆக உயர்ந்துள்ளது. ஆண் வாக்காளர்கள் 19 லட்சத்து 70 ஆயிரத்து 279 பேர், பெண் வாக்காளர்கள் 20 லட்சத்து 44 ஆயிரத்து 323 பேர், மூன்றாம் பாலினத்தினர் 1,276 பேர் இடம்பெற்றுள்ளனர். கடந்த அக்.29-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது சென்னையில் 63 ஆயிரத்து 380 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 980 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3 லட்சத்து 16 ஆயிரத்து 642 வாக்காளர்களும் உள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் 96 ஆயிரத்து 504 நபர்கள், பெயர் சேர்த்தல் தொடர்பாக மனுக்கள் அளித்திருந்தனர். அவற்றின் மீது உரிய ஆணை பிறப்பிக்கப்பட்டு, 96 ஆயிரத்து 184 வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களது கள ஆய்வின்போது கண்டறியப்பட்ட இடம் பெயர்ந்தோர், காலமானோர் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளில் இடம் பெற்றோர் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் பெயர் நீக்கம் செய்யக் கோரி பெறப்பட்ட 32 ஆயிரத்து 964 மனுக்களைப் பரிசீலனை செய்து 32 ஆயிரத்து 804 பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில், திமுக மாநில சட்டத் துறை துணைச் செயலாளர் கே.சந்துரு, அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பாஜக மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.கே.நவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்று இறுதி வாக்காளர் பட்டியலை பெற்றுக்கொண்டனர். கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ம.பிரதிவிராஜ், கட்டா ரவி தேஜா, மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) பி.சுரேஷ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT