Published : 07 Jan 2025 12:56 AM
Last Updated : 07 Jan 2025 12:56 AM
சென்னை: தமிழக மக்களின் நலனுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஆளுநராக இருக்கிறார். தமிழகத்துக்கு எதிரான நிலையை எடுக்கிறார். இது கூட்டாட்சி தத்துவத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது.
பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் இல்லாதது தவறுகள் நடக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. எதற்கு துணை வேந்தர்களை நியமிக்க ஆளுநர் மறுக்கிறார்.இவ்வாறு அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் தமிழக மக்களுக்கு எதிராகவே இருக்கிறது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஜி.கே.மணி கருத்து: சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு, பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. அதை கண்டித்து அரசியல் கட்சிகள் ஜனநாயக ரீதியாக போராடுவதற்கும் அரசு அனுமதி வழங்க மறுக்கிறது. பேசுவதற்கும் வாய்ப்பு அளிக்கவில்லை, போராடுவதற்கும் அனுமதி இல்லை. இப்படி அனுமதி மறுக்கப்பட்டு போராடியவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து மண்டபத்தில் பிடித்து வைக்கின்ற கொடிய சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இதையொட்டி பாமக வெளிநடப்பு செய்திருக்கிறது.
அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி எந்த அமைப்பாக இருந்தாலும் சரி ஜனநாயகத்தில் போராடுவதற்கு உரிமை இருக்கிறது. அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பொதுவுடமைக் கட்சிகள் கூட அதை சொல்கின்றனர். திமுக கூட்டணி கட்சியில் இருக்க கூடியவர்களேஇதை சொல்வது குறிப்பிடத்தக்கது. ஜனநாயக கட்சிகளையும், அமைப்புகளையும் மதித்து போராடுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT