Published : 06 Jan 2025 07:47 PM
Last Updated : 06 Jan 2025 07:47 PM
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகேயுள்ள கயத்தூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் பங்கேற்று சமத்துவ பொங்கலை கொண்டாடி பொங்கல் தொகுப்பு வழங்கினார்.
விஜய் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து களமிறங்கியுள்ளார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் வரும் இடைத்தேர்தல்களையும் தவிர்க்க முடிவு செய்துள்ளார். அவர் ஏன் மக்களை நேரடியாக சென்று சந்திக்கவில்லை. இது என்ன வொர்க் ஃப்ரெம் ஹோம் அரசியலா என்று, அவருக்கு எதிர் துருவத்தில் இருக்கும் பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
கடைசி படத்தின் ஷூட்டிங் நடைபெறுவதால், அதனை முடித்துக் கொடுத்துவிட்டு களத்துக்கு நேரடியாக வருவார் என்று தவெகவினர் விளக்கமளித்தனர். இதற்கிடையே அரசு அனுமதியின்றி பள்ளி வளாகத்தில் அரசியல் கட்சி எப்படி பொங்கல் விழா கொண்டாடலாம் என சர்ச்சை எழுந்தது.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனிடம் கேட்டபோது, பள்ளிக் கட்டிடம் உள்ள பகுதியே கோயிலுக்கு சொந்தமானது. இன்னமும் பள்ளிக் கட்டிடம் அமைந்துள்ள பகுதி, வட்டார வளர்ச்சி அலுவலரின் கட்டுப்பாட்டில் வரவில்லை. இவ்விழா நடக்கும் முன்பே விழா குழுவினர் பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜவேலுவிடம் இது குறித்து பேசியுள்ளனர். இதனை அவர் கல்வித் துறைக்கு தெரிவிக்காதது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இப்பள்ளிக்கு இன்று வட்டார கல்வி அலுவலர் ஜெய்சங்கர் நேரில் சென்று விசாரித்தபோது, விழா முடிந்தபின் அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT