Published : 06 Jan 2025 06:34 PM
Last Updated : 06 Jan 2025 06:34 PM
மதுரை: மேலூர் அருகே நடந்த டங்ஸ்டன் திட்ட விழிப்புணர்வு கூட்டத்தில் திமுக - நாம் தமிழர் கட்சியினருக்குள் திடீர் மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டி,நாயக்கர்பட்டி, அ.வல்லாளபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் அடங்கிய சுமார் 5 ஏக்கரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதற்கு அப்பகுதி மக்கள், விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள், விவசாயிகள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில், அ.வல்லாளபட்டியில் டங்ஸ்டன் திட்டம் குறித்த விழிப்புணர்வு, கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நேற்று இரவு நடந்தது. கட்சியின் மாநில இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் தலைமை வகித்து பேசினார்.
கூட்டத்தில் அவர் பேசும்போது, ''திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குறித்து விமர்சித்து பேசினார். இத்திட்டம் குறித்து மத்திய அரசு மாநில அரசுக்கு கடிதம் அனுப்பிய நிலையில், திமுக அரசு மவுனமாக இருந்தது ஏன்'' என்று கேள்வி எழுப்பினார். கூட்டத்தில் இருந்த உள்ளூர் நபர் ஒருவர், ''கட்சிகள் குறித்து பேசாமல் டங்ஸ்டன் திட்டம் குறித்து மட்டுமே பேசவேண்டும்'' என இடும்பாவனம் கார்த்தியை எச்சரித்தார்.
தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த சிலரும் எழுந்து மேடையில் பேசிய கார்த்திக்கிடம் வாக்குவாதம் செய்தனர். அங்கு வந்த போலீஸார் இரு தரப்பினரையும் எச்சரித்து கலைந்து போகச் செய்தனர். பின்னர் போலீஸாரின் அறிவுறுத்தலால் கூட்டமும் முடிக்கப்பட்டது. இடுபாவனம் கார்த்திக் உள்ளிட்ட அக்கட்சியினரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். திமுகவைச் சேர்ந்த நபர்கள் இம்பாவனம் காத்திக்கிடம் மேடையில் வாக்குவாதம் செய்து மோதிக்கொண்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT