Published : 06 Jan 2025 03:46 PM
Last Updated : 06 Jan 2025 03:46 PM
சென்னை: அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும், அனைத்து அரசு விழாக்களிலும் தேசிய கீதத்துக்கான மரியாதையை மீட்டெடுப்பதற்குமான தனது உறுதிப்பாட்டில் ஆளுநர் உறுதியாக உள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
இன்று கூடிய தமிழக சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கை ஏற்கப்படவில்லை என குற்றம் சாட்டி ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமல் வெளியேறினார். இந்த விவகாரம் சர்ச்சை ஆகியுள்ள நிலையில், இது குறித்து ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “மொழி, கலாச்சாரம் மற்றும் மரபுகள் உட்பட தமிழ்நாட்டின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தின் மீதான தனது மாறாத அன்பு, மரியாதை மற்றும் போற்றுதலை தமிழக ஆளுநர் மீண்டும் வலியுறுத்துகிறார்.
"தமிழ் தாய் வாழ்த்து" என்ற தமிழ் மாநில பாடலின் புனிதத்தை தமிழக ஆளுநர் எப்போதும் நிலைநாட்டி, ஒவ்வொரு நிகழ்விலும் பயபக்தியுடன் பாடுகிறார். உலகின் பழமையான மற்றும் மிகவும் புகழ்பெற்ற மொழியான தமிழ், எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது, இந்த உணர்வை ஆளுநர் முழு மனதுடன் பகிர்ந்து கொள்கிறார். மாநிலத்திற்குள்ளும் தேசிய அளவிலும் தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியை மேம்படுத்துவதற்கு ஆளுநர் ஒவ்வொரு வகையிலும் ஆதரவு அளித்துள்ளார்.
அரசமைப்புச் சட்டத்தை மதித்து, அரசியல் சட்டக் கடமைகளைப் பின்பற்றுவது ஆளுநரின் கடமை. தேசிய கீதத்திற்கு மரியாதை அளிப்பது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமை, அது தேசியப் பெருமைக்குரிய விஷயமாகும்.
நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநில சட்டசபையிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது. தேசிய கீதக் குறியீட்டின்படியும் இது கட்டாயம். முன்கூட்டியே பலமுறை நினைவூட்டல்களை தெரிவித்த பிறகும், இந்தக் கோரிக்கைகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது.
இன்று (06.01.2025), ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாமல் அல்லது இசைக்கப்படாமல் இருந்தபோது, அவையின் அரசியலமைப்பு கடமைகளை ஆளுநர் மரியாதையுடன் நினைவூட்டி, தேசிய கீதம் பாடப்படுவதற்கு அல்லது இசைக்கப்படுவதற்கு முதல்வர் மற்றும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அது திட்டவட்டமாக மறுக்கப்பட்டது.
ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாமல் அல்லது இசைக்கப்படாமல் இருப்பது அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயலாகும். இதனால் அதிர்ச்சியடைந்த ஆளுநர், அவையை விட்டு வெளியேறினார். தமிழரின் பெருமையை நிலைநிறுத்துவதுடன் அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும், அனைத்து அரசு விழாக்களிலும் தேசிய கீதத்துக்கான மரியாதையை மீட்டெடுப்பதற்கும் ஆளுநர் தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறார்.”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT