Published : 06 Jan 2025 02:57 PM
Last Updated : 06 Jan 2025 02:57 PM
சென்னை: உரை தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் இசைக்கப்படும் என்பது தெரிந்தே சட்டப்பேரவையை ஆளுநர் அவமதித்துள்ளார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்ற வேண்டிய ஆளுநர் தேசிய கீதத்தை பாடவில்லை என்று கூறி வெளியேறி இருப்பது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்பது தெளிவாகத் தெரிகிறது. சட்டமன்றத்தில் பின்பற்றப் பட்டு வரும் மரபு அடிப்படையில் ஆளுநர் உரை தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் இசைக்கப்படும். கடந்தாண்டே சட்டப்பேரவை தலைவர், பேரவை மரபு குறித்து ஆளுநருக்கு தெரிவித்திருக்கிறார். ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு தயாரித்துள்ள உரையை வாசிக்காமலேயே வெளியேறிவிட வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்து கொண்டு அதையே நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தை அவமதித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி செயல் கடும் கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து இதுபோன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பதும், அரசியல் கட்சிப் பிரதிநிதி போல அரசுக்கு எதிராக அவதூறுகளை ஆளுநர் அள்ளி வீசி வருவதும் அவர் வகித்து வரும் அரசியல் சாசன பொறுப்புக்கு ஏற்றது அல்ல. சட்டமன்ற அவைத் தலைவர் வாசித்துள்ள ஆளுநர் உரையில், திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள், அதனால் மக்கள் பெற்று வரும் பயன்கள் குறித்து பட்டியலிடப்பட்டு இருக்கின்றன. பொருளாதார குறியீடுகளில் தமிழ்நாடு எட்டியுள்ள வளர்ச்சி என்பது அதன் மனித வள மேம்பாட்டு குறியீடுகளிலும் பிரதிபலிக்கிறது. இவ்வாறு பொருளாதார வளர்ச்சி அடைவதும் மருத்துவம் கல்வி மற்றும் சமூக நலனும் மேம்படுத்துவதில் நாட்டிற்கு முன்னாடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம், மகளிர் பொருளாதாரம் மேம்பாட்டிற்கு வழிவகை செய்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 1.15 கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை இந்த அரசு உரிமைத் தொகையாக வழங்கி வருகிறது. இவ்வாறு பயன்பெறும் குடும்பங்களின் வறுமையை இந்தத் திட்டம் குறைத்துள்ளது மட்டுமின்றி, பெண்களுக்கு உரிய உரிமையும் அதிகாரமும் அளித்ததன் மூலம் குடும்பங்களில் நிலையையும் உயர்த்தி உள்ளது.
முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.4000 கோடி மதிப்பீட்டில் 9,653 கி.மீ. சாலைகளை மேம்படுத்தும் பணிகள் நடந்துள்ளன. ஊரக பகுதிகளில் மேலும் 10,000 கி.மீ. நீளமுள்ள சாலைகளை மேம்படுத்தும் நோக்கில் திட்டம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மின் வாகனங்களின் மையமாக கோவை, ஓசூர் மாறியுள்ளது. முதலீடுகள் மூலம் சமமான பரவலான வளர்ச்சி கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
முதலீடுகள் மூலம் சமமான பரவலான வளர்ச்சி கொண்டு வரப்பட்டுள்ளது. சமச்சீரான தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தஞ்சை, தருமபுரி, தேனி மாவட்டங்களில் புதிதாக சிப்காட் அமைக்கப்பட்டுள்ளது. 2024-ல் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.4113 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் வறுமையை முழுமையாக ஒழிக்க தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டு இருப்பதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கதாகும். ஒன்றிய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு முன்வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT