Published : 06 Jan 2025 12:23 PM
Last Updated : 06 Jan 2025 12:23 PM
சென்னை: “திமுக ஆட்சியில் ஆளுநர் உரை என்பது சபாநாயகர் உரையாக மாறிவிட்டது. இந்த உரை காண்பதற்கு காற்றடைத்த பலூன் போன்று பெரிதாக உள்ளதே தவிர, உள்ளே எதுவும் இல்லை. ஆளுநர் உரை சபாநாயகர் உரையாக காட்சியளிக்கிறது. திமுக அரசுக்கு சுய விளம்பரத்தை தேடித் தருவதைவிட, இந்த உரையில் வேறு எதுவும் இல்லை.” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் இன்று (ஜன. 6) ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முன்னதாக சட்டப்பேரவைக்கு வந்த தமிழக ஆளுநரை சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவைச் செயலர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவைக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி சிறிது நேரத்திலேயே வெளியேறி காரில் புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் வெளியேறிய நிலையில் ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு முழுமையாக தமிழில் வாசித்தார்.
இதனிடையே, சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஆளுநர் உரை குறித்த கேள்விக்கு பதிலளித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “இந்த ஆட்சியில் ஆளுநர் உரை என்பது சபாநாயகர் உரையாக மாறிவிட்டது. இந்த உரை காண்பதற்கு காற்றடைத்த பலூன் போன்று பெரிதாக உள்ளதே தவிர, உள்ளே எதுவும் இல்லை. ஆளுநர் உரை மாற்றப்பட்டு, இன்றைய தினம் அது சபாநாயகர் உரையாக காட்சியளிக்கிறது. இந்த உரை திமுக அரசுக்கு சுய விளம்பரத்தை தேடித் தருவதைவிட, இதில் வேறு எதுவும் இல்லை.
ஆளுநர் உரையை புறக்கணிக்கவில்லை. திட்டமிட்டு ஆளுநர் உரையாற்றக் கூடாது என்ற நோக்கத்துடன் திமுக செயல்பட்டுள்ளது. வழக்கமான மரபுகளைத்தான் தமிழக சட்டப்பேரவை கடைபிடிக்கிறது. இதே ஆளுநர்தான் கடந்த 3 ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இறுதியில் தேசிய கீதம் என்ற நடைமுறைதானே இருக்கிறது. அதில் மாற்றம் எதுவும் இல்லை.
அதேபோல், திமுக ஆட்சியின் அவலங்களை ஏற்கெனவே இரண்டு மூன்று முறை ஆளுநரைச் சந்தித்து சமர்ப்பித்தோம். அதற்கு ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அண்ணா பல்கலை. விவகாரத்தில், நாங்கள் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் முயற்சிகளை எடுத்து வருகிறோம்,” என்று அவர் கூறினார். | விரிவாக வாசிக்க > ‘தேசிய கீதத்துக்கு அவமதிப்பு’ - சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT