Published : 06 Jan 2025 10:15 AM
Last Updated : 06 Jan 2025 10:15 AM

‘தேசிய கீதத்துக்கு அவமதிப்பு’ - சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டத்தில் தனது உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட விளக்கத்தில், “அரசமைப்புக்கும், தேசிய கீதத்துக்கும் அப்பட்டமான அவமரியாதை செய்பவர்களுடன் துணை நிற்கக்கூடாது என்பதால் ஆளுநர் வருத்தத்துடன் அவையில் இருந்து வெளியேறினார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் இன்று (ஜனவரி 6) ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முன்னதாக சட்டப்பேரவைக்கு வந்த தமிழக ஆளுநரை சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவைச் செயலர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவைக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி சிறிது நேரத்திலேயே வெளியேறி காரில் புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் வெளியேறிய நிலையில் ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு முழுமையாக தமிழில் வாசித்தார்.

ஆளுநர் மாளிகை விளக்கம்: இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள விளக்கத்தில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது.

இன்று ஆளுநர் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக முதலமைச்சர், சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு: அவையைப் புறக்கணித்து காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் வெளியேறினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, “ஆளுநர் தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறார். மாற்று அரசாங்கத்தை நடத்த முயற்சிகிறார். இது ஜனநாயக விரோத போக்கு. கூட்டாட்சிக்கு எதிரானது.” என்று கூறினார். காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்ததிருந்தனர்.

‘யார் அந்த சார்?’ பேட்ஜ்: முன்னதாக அதிமுக எம்எல்ஏ.,க்கள் சட்டப்பேரவைக்கு யார் அந்த சார்? என்ற பேட்ஜ் அணிந்து வந்ததோடு அது தொடர்பாக விவாதிக்கக் கோரி கவன ஈர்ப்பு நோட்டீஸும் கொடுத்திருந்தனர். அவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ.,க்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x