Published : 06 Jan 2025 06:12 AM
Last Updated : 06 Jan 2025 06:12 AM

தாம்பரத்தில் நடைமேம்பால பணியால் மின்சார ரயில் சேவை ரத்து: பேருந்தில் செல்வதற்காக மக்கள் கூடியதால் நெரிசல்

பேருந்தில் செல்வதற்காக பயணிகள் ஒரே நேரத்தில் கூடியதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. | படம்:எம்.முத்துகணேஷ் |

சென்னை / தாம்பரம்: ​தாம்​பரத்​தில் நடைமேம்​பாலப் பணி காரண​மாக, மின்சார ரயில்கள் நேற்று காலை முதல் மாலைவரை ரத்து செய்​யப்​பட்​டது. இதனால், பயணிகள் கடும் அவதிப்​பட்​டனர். சென்னை எழும்​பூர் - விழுப்புரம் மார்க்​கத்​தில் தாம்​பரம் யார்டில், புதிய நடைமேம்பால பணி காரண​மாக, சென்னை கடற்கரை - செங்​கல்​பட்டு வழித்​தடத்​தில் மின்சார ரயில் சேவை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரைரத்து செய்​யப்​படும் என தெற்கு ரயில்வே நேற்று முன்​தினம் அறிவித்​தது.

மேலும், சென்னை கடற்கரை - பல்லா​வரம், கூடு​வாஞ்​சேரி - செங்​கல்​பட்டு இடையே இருமார்க்​க​மாக​வும் சிறப்பு ரயில்கள் இயக்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. அதன்​படி, நேற்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் கூடு​வாஞ்​சேரி - பல்லா​வரம் இடையே மின்சார ரயில்கள் முழு​வதுமாக ரத்து செய்​யப்​பட்​டன.

கடற்கரை - பல்லா​வரம், கூடு​வாஞ்​சேரி - செங்​கல்​பட்டு இடையே 30 நிமிட இடைவெளி​யில் மின்சார ரயில்கள் இயக்​கப்​பட்டன. இதன்​காரண​மாக, சென்னை கடற்​கரை​யில் இருந்து தாம்​பரம், கிளாம்​பாக்கம் மற்றும் செங்​கல்​பட்டு செல்​லும் பயணிகள் பல்லா​வரம் ரயில் நிலை​யத்​தில் இறங்கி பேருந்து, ஆட்டோ மற்றும் கார்கள் மூலம் பயணம் மேற்​கொண்​டனர்.

மின்சார ரயில்கள் பல்லா​வரம் வரையில் மட்டுமே இயக்​கப்​படும் என்பதை அறிந்து ஆட்டோ மற்றும் கார்கள் பல்லா​வரத்​தில் வரிசையாக நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்தன. வழக்​கத்தை விட ஆட்டோக்​களில் கூடு​தலாக பணம்வசூலிக்​கப்​பட்​டதாக பயணிகள் குற்றம் சாட்​டினர். செங்​கல்​பட்​டில் இருந்து கடற்கரை வரும் பயணிகள் கூடு​வாஞ்​சேரி வரை ரயிலில் பயணித்​தனர்.

அங்கிருந்து பேருந்து மூலம் பயணம் செய்து தாம்​பரம், சென்ட்ரல் போன்ற பகுதி​களுக்கு சென்​றடைந்​தனர். குறிப்​பாக, தாம்​பரத்​தில் ரயில்கள் இயக்​கப்​படாத​தால் பயணிகள் அனைவருமே பேருந்​தில் பயணம் செய்​தனர். இதனால், தாம்​பரம் பேருந்து நிலை​யத்​தில் மக்கள் கூட்டம் அலைமோ​தி​யது.

நேற்று ஞாயிற்றுக்​கிழமை விடு​முறை தினம் என்ப​தால், பொங்கல் பண்டிகைக்கு புதிய ஆடைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்​கு​வதற்கு பொது​மக்கள் திட்​ட​மிட்​டிருந்​தனர். ஆனால், மின்சார ரயில் ரத்தால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்​தனர். மேலும், குறிப்​பிட்ட தொலை​வுக்கு மட்டும் இயக்​கப்​பட்ட குறைவான சிறப்பு மின்​சார ர​யில்​களி​லும் நெரிசலுடன் பயணிக்கும் நிலைக்கு தள்​ளப்​பட்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x