Published : 06 Jan 2025 06:06 AM
Last Updated : 06 Jan 2025 06:06 AM
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2024-ம் ஆண்டில் மட்டும் 37 பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.15 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சை முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன், ரத்தவியல் நிபுணரும், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை நிபுணருமான அருணா ராஜேந்திரன் ஆகியோர் கூறியதாவது: உடலில் உள்ள 206 எலும்புகளுக்கு உள்ளேயும் மஜ்ஜை உள்ளது. அதில் இருந்துதான் ரத்த அணுக்கள் உருவாகின்றன. குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு அது தடைபட்டு முக்கிய மஜ்ஜைகளில் இருந்து மட்டும் அணுக்கள் உற்பத்தி செய்யப் படும்.
அதில் ஏற்படும் சில மரபணுமாற்றங்கள் காரணமாக ஸ்டெம் செல் உற்பத்தி தடைபடலாம் அல்லது சேதமடையலாம். நிணநீர் புற்றுநோய், எலும்பு மஜ்ஜை திசு புற்றுநோய், குருதிசார் புற்றுநோய், தலசீமியா, மரபணு பாதிப்பு உள்ளிட்டவற்றால் அத்தகைய பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
அந்த பாதிப்பு ஏற்பட்டவர் களுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை எனப்படும் ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையின்போது தானமளிப்பவரின் ரத்தத்தையோ அல்லது இடும்பு எலும்பு மஜ்ஜையில் உள்ள ரத்த அணுக்களையோ எடுத்து அது தேவைப்படும் நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை நேரடியாக நோயாளியின் எலும்பு மஜ்ஜைக்குள் ரத்த அணுக்களை செலுத்தும் முறைதான் இருந்தது. தற்போது ஹோமிங் எனும் முறைப்படி ரத்த நாளத்துக்குள் ஸ்டெம் செல்களை செலுத்தினாலே அவை மஜ்ஜைக்குள் செல்லும் நுட்பம் வந்துவிட்டது. அதன்படி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வாரத்துக்கு ஒரு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த ஆண்டு மட்டும் 37 நோயாளிகள் அந்த சிகிச்சைகள் மூலம் மறுவாழ்வு பெற்றுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் 125-க்கும் மேற்பட்டோருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ரூ.15 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சைகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோல், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மூன்று குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT