Published : 06 Jan 2025 08:05 AM
Last Updated : 06 Jan 2025 08:05 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில், புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, திமுக அரசை விமர்சித்து முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவர் மாற்றப்பட்டு பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு ஜன.3 முதல் 5-ம் தேதி வரை நடைபெற்றது. இதையொட்டி நடந்த பேரணி, பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநாட்டில் நடந்த நிர்வாகிகள் தேர்வில் கே.பாலகிருஷ்ணன் மாற்றப்பட்டு, புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டார். மேலும், மாநில செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
முன்னதாக, திமுக அரசை விமர்சித்து முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவர் மாற்றப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் கூறியதாவது: மத்திய அரசின் தாராளமய பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக வலிமைமிக்க போராட்டத்தை முன்னெடுப்போம்.
மதவெறி சக்திகளை எதிர்ப்பதில் திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பயணிக்கும். அதேநேரத்தில், நவீன தாராளமய கொள்கை என்ற பெயரில் மக்களை பாதிக்கும் மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு ஜனநாயக வகையில் போராடுவோம்.
உண்ணாவிரதம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்கள் அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமை. இதை மறுப்பதற்கு எந்த அரசுக்கும் உரிமையில்லை. எங்கள் கட்சியின் மாநில மாநாட்டு பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்ததன் விளைவாக எங்களது கண்டனத்தை தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. திமுகவுடன் பல நேரங்களில் உறவோடு இருந்திருக்கிறோம். எதிர்வரிசையில் இருந்திருக்கிறோம். திமுகவால் தான் எங்களுக்கு வெளிச்சம் கிடைக்கிறது என்பதெல்லாம் பொருத்தமற்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாநிலச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெ.சண்முகம் (64), திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம், பெருவளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். மேலும் பட்டியலின சமூகத்திலிருந்து மாநிலச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர். தனது 18-வது வயதில் மாணவர் சங்கத்தில் இணைந்த அவர், பின்னர் இந்திய வாலிபர் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கம், விவசாயிகள் சங்கங்களில் பொறுப்புகளை வகித்தவர். தமிழக அரசின் அம்பேத்கர் விருதை பெற்றுள்ளார்.
முதல்வர், தலைவர்கள் வாழ்த்து: பெ.சண்முகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் நடிகர் விஜய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT