Published : 06 Jan 2025 06:04 AM
Last Updated : 06 Jan 2025 06:04 AM

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை, புறநகரில் துணி கடைகளில் குவிந்த மக்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் நேற்று குவிந்த மக்கள். | படம்: சத்தியசீலன் |

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை, புறநகரில் உள்ள துணிக் கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ள நிலையில், பெரும்பாலானோர் வரும் 10-ம் தேதி இரவே சொந்த ஊர்களுக்கு புறப்பட திட்டமிட்டிருப்பதால், நேற்றே துணிக்கடைகளுக்கு சென்று புத்தாடைகளை வாங்கத் திட்டமிட்டிருந்தனர். இதனால் சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று துணிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

வட சென்னையில், பழைய வண்ணாரப்பேட்டை, எம்சி சாலையில் உள்ள ஏராளமான துணிக் கடைகளில் மக்கள் குவிந்ததால், அப்பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகளின் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து பழைய வண்ணாரப்பேட்டை செல்லும் சுரங்கப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்களை போலீஸார் திருப்பிவிட்டனர்.

தியாகராய நகரில்.. தியாகராய நகரில் உஸ்மான் சாலை, பாண்டி பஜார் உட்பட பல்வேறு இடங்களில் நேற்று காலை முதலே பொதுமக்கள் துணிக்கடைகளில் குவிந்தனர். குறிப்பாக ரங்கநாதன் தெருவில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. அங்கு பிரபல ஜவுளிக்கடைகள், நகைக் கடைகளில் ஆடைகள், நகைகளை ஏராளமானோர் வாங்கிச் சென்றனர். அதிகளவில் மக்கள் கூடியதால் அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இங்கும் காலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. போக்குவரத்து போலீஸார் போக்குவரத்தை முறைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

புரசைவாக்கத்தில்.. புரசைவாக்கத்தில் உள்ள துணிக் கடைகளுக்கு காலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து புத்தாடைகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர். துணிக் கடைகளுக்கு இணையாக சாலையோர கடைகளிலும் துணிகள் மற்றும் அணிகலன்கள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் விதவிதமான டிசைன்களில் துணிகள் கடைகளில் குவிந்துள்ளது. புரசைவாக்கம் தானா தெருவில், பானைகள் விற்பனையும் தொடங்கியுள்ளது. பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு வண்ணங்கள், ஓவியங்கள் தீட்டப்பட்ட பானைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

மேலும் பள்ளிக்கரணை, தாம்பரம், நங்கநல்லூர், பல்லாவரம், குரோம்பேட்டை, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. பட்டு ஆடைகள், சேலைகள், வேட்டி சட்டைகள் போன்ற பாரம்பரிய உடைகளை பொதுமக்கள் விரும்பி வாங்கினர். துணிக் கடைகளுக்கு இணையாக ஓட்டல்கள், இனிப்பகங்களிலும் அதிக அளவில் மக்கள் குவிந்திருந்தனர்.

இப்பகுதிகளில் திருநெல்வேலி, சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட பானைகளை விற்பனை செய்யப்பட்டன. வண்ணம் பூசப்படாத மண் பானைகள் ரூ.50 முதல் ரூ.200 வரையும், வண்ணம் பூசப்பட்ட பெரிய பானைகள் ரூ.500 வரையும் விற்பனை செய்யப்படுகின்றன. மொத்தத்தில் சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று மக்கள் உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகைக்கான துணிகளை வாங்கிச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x