Published : 06 Jan 2025 12:25 AM
Last Updated : 06 Jan 2025 12:25 AM
புதுக்கோட்டை: தமிழகத்தில் கோயில்களை கண்டுகொள்ளாத அறநிலையத் துறையை கலைக்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் கோயிலுக்கு நேற்று வந்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் பழமையான கோயில்கள் பராமரிப்பு இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. அங்குள்ள சிற்பங்கள் பாதுகாக்கப்படவில்லை. வழிபாடுகூட நடத்தப்படாமல் உள்ளன.
கோயில்கள் மூலம் அறநிலையத் துறை ஆண்டுக்கு ரூ.656 கோடி வரி வசூலிக்கிறது. மத்திய தொல்லியல் துறை மூலம் நாடு முழுவதும் உள்ள 3,579 வரலாற்று இடங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,308 கோடியை மத்திய அரசு கொடுக்கிறது. ஆனால், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் உட்பட அனைத்து கோயில்களும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. மின் விளக்கு, கதவு இல்லாத நிலையிலும்கூட கோயில்கள் உள்ளன.
தமிழகத்தில் கோயில்களை கண்டுகொள்ளாத அறநிலையத் துறையை கலைக்க வேண்டும். அறநிலையத் துறை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். கோயில்களை நிர்வகிக்க மகாசபை போன்ற அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் 38 ஆயிரம் கோயில்கள் அறநிலையத் துறை வசம் உள்ளன. ஆனால், ஒரு கோயிலுக்குக்கூட முதல்வர் செல்ல மறுக்கிறார். இத்தகைய கோரிக்கையை அடுத்து முதல்வராக வர நினைக்கும் அரசியல் கட்சியினர் வலியுறுத்த வேண்டும்.
கோயில்களை பாதுகாப்பதற்காக இந்து இயக்கங்களை ஒருங்கிணைத்து, ஆலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கலாம் என உத்தேசித்துள்ளேன்.
கோயில்களை மாநில தொல்லியல் துறைதான் பழமை மாறாமல் புனரமைக்க வேண்டும். அறநிலையத் துறை கும்பாபிஷேகம் மட்டும்தான் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT