Published : 05 Jan 2025 06:45 PM
Last Updated : 05 Jan 2025 06:45 PM

முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழாவில் மாணவியரின் கருப்பு துப்பட்டா பறிமுதல்: தமிழக பாஜக கண்டனம்

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் கருப்பு துப்பட்டாக்கள் அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. இதனை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து உரையாற்றினார். அந்த நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். கருப்பு நிற துப்பட்டா அணிந்து வந்த மாணவிகளிடம் அதை பாதுகாப்பு பிரிவு போலீஸார் வாங்கி வைத்துக் கொண்டு அனுமதித்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “கருப்பு நிற துப்பட்டாவை கருப்பு நிற கொடி என்று நினைக்கிறார்களோ என்னவோ? கருப்பை பார்த்து ஸ்டாலின் பயப்பட ஆரம்பித்து விட்டாரோ என்னவோ தெரியவில்லை.

அரண்டவர் கண்களுக்கு தெரிவது எல்லாம் பேய் என்பது மாதிரி, கருப்பாக இருந்தால் ஒருவேளை கருப்புக் கொடி காட்ட வருகிறார்களோ என்று நினைத்திருக்கலாம். ஆட்சி அவ்வளவு தவறுகள் செய்கிறது. ஆகையால் துப்பட்டாவை எடுத்துக் காட்டிவிட்டால் என்ன செய்வது என்று பயப்படுகிறார்கள் என்பது தெரிகிறது.

அண்ணா பல்கலை விவகாரத்தில் உண்மையான விசாரணை நடக்கிறது என்பதை காவல்துறை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். உயர்கல்வி அமைச்சர் ஒரு கருத்து சொல்கிறார், போலீஸ் கமிஷனர் ஒரு கருத்தை சொல்கிறார், இதனால் தான் மக்களுக்கு குழப்பம் வருகிறது. நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது என்னவெல்லாம் செய்தீர்கள்? அப்போது உங்களுக்கு பேச உரிமை இருந்தது. இப்போது மற்றவர்களுக்கு அந்த உரிமை இல்லையா?" என்று கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, சென்னையில் முதல்வர் விழாவில் மாணவிகள் கருப்பு துப்பட்டா அணிய தடை விதித்த செயல் கண்டிக்கதக்கது என கூறினார்.

பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் கருப்பு துப்பட்டா அணிந்த மாணவிகள் அறங்கத்துக்குள் நுழையும் முன் அவற்றை அகற்றிவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பயம் சூழ்ந்து விட்டது. என்ன செய்வது என்றே தெரியாமல் குழம்பி நம்பிக்கை இழந்துள்ளனர். இது என்ன விதமான எதேச்சதிகாரம்?” எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x