Published : 05 Jan 2025 06:37 PM
Last Updated : 05 Jan 2025 06:37 PM
மதுரை: தமிழகம் முழுவதும் பாஜக மாவட்டத் தலைவர் தேர்தல் தொடங்கியுள்ளது. மாவட்டம் வாரியாக 3 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் ஒருவரை தலைவராக தேசிய தலைமை அறிவிக்கவுள்ளது.
தமிழகத்தில் பாஜக மாவட்ட தலைவர் தேர்தல் தொடங்கியுள்ளது. பூத் (கிளை), மண்டல் (ஒன்றிய) நிர்வாகிகள் தேர்தல் முடிந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து மாவட்டத் தலைவர் தேர்தல் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பாஜகவில் 66 அமைப்பு மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத் தலைவர் தேர்தலுக்கான கருத்துக் கேட்பு கூட்டம் மாநிலம் முழுவதும் மாவட்டம் வாரியாக இன்று தொடங்கி ஜன. 7 வரை நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் மாநில நிர்வாகிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் ஏற்கெனவே விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. கருத்து கேட்பு கூட்டத்தில் விருப்ப மனு அளித்தவர்களின் பட்டியல் படிக்கப்படுகிறது. பின்னர் வாக்களிக்க தகுதியானவர்கள் மேடையில் மாநில நிர்வாகி மற்றும் தேர்தல் அதிகாரிகள் முன்பு ஓட்டுப்பெட்டியில் வாக்களிக்கின்றனர்.
மதுரை மாநகர் மாவட்டம், மதுரை மேற்கு மாவட்டத்தில் மாவட்டத் தலைவர் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பார்வையாளர்கள் பங்கேற்றனர். மாநகர் மாவட்டத்தில் 72 வாக்காளர்கள் உள்ளனர். தலைவர் பதவிக்கு 18 பேர் போட்டியிடுகின்றனர்.
தேர்தலை தொடங்கி வைத்து கேசவ விநாயகம் பேசுகையில், "பாஜக உறுப்பினர் எண்ணிக்கை இரண்டரை கோடியை தாண்டிவிட்டது. பாஜக வலிமையாக உள்ளது. பாஜகவுக்கு இந்தியாவில் மட்டும் எதிர்ப்பு இல்லை. உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக விரோத சக்திகள் பாஜகவை எதிர்த்து வருகின்றன. இந்த எதிர்ப்பையும் மீறி இந்தியா வளர்ச்சிப்பாதையில் செல்ல பாஜகவும், பிரதமர் மோடியும் தான் காரணம். பாஜக அமைப்புரீதியாக பலமாக இருப்பதால் தான் மக்களிடம் குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெற முடிகிறது. பாஜகவை அமைப்பு ரீதியாக பலமாக்க துடிப்பு மிக்கவர்களை தலைவர்களாகவும், நிர்வாகிகளாகவும் தேர்வு செய்ய வேண்டும்" என்றார்.
தேர்தல் முடிந்து வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சென்னைக்கு கொண்டுச் செல்லப்பட்டு மாவட்டம் வாரியாக வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் மூன்று பேர் பட்டியல் தயாரிக்கப்படும். அந்தப் பட்டியலுக்கு மாநில மைக்குழுவில் ஒப்புதல் பெறப்படும். பின்னர் பட்டியல் தேசிய தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த 3 பேரில் ஒருவரை மாவட்டத் தலைவராக தேசிய தலைமை அறிவிக்கும் என பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT