Published : 05 Jan 2025 04:41 PM
Last Updated : 05 Jan 2025 04:41 PM
சென்னை: சமூகம், பொருளாதாரம், அரசியல், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலை, வரலாறு என பல்வேறு தளங்களில் தங்களின் தனித்த முத்திரையை பதித்து தமிழக அரசின் விருது பெறுபவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொன்மை வரலாற்றை கொண்டியிங்கும் தமிழ் சமூகத்தின் மொழியின் சீரிளமையின் திறனை, மொழி ஆராய்ச்சி உலகம் வியந்து பார்த்து வருகிறது. ''யாமறிந்த மொழிகளிலே, தமிழ் மொழி போல் யெங்கும் காணோம்'' என்றார் மகாகவி. உயர்தனி செம்மொழியாம் தமிழ் மொழி வளர்ச்சிக்கும், வளமைக்கும், செழுமைக்கும் வழிவழியாக பலர் பங்களிப்பு செய்து வருகின்றனர். இதில் பெருமைமிகு பங்களிப்பு செய்து வரும் அனைவரையும் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பாராட்டி விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்த வகையில் அய்யன் திருவள்ளுவர், அறிஞர் அண்ணா, மகாகவி பாரதி, பாவேந்தர் பாரதிதாசன், தமிழ் தென்றல் திரு.வி.க., மொழிக் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் பெயர்களில் உருவாக்கிய விருதுகளுக்கு முறையே புலவர் மு.படிக்கராமு, எல்.கணேசன், கவிஞர் கபிலன், கவிதைப் பேரொளி பொன்.செல்வகணபதி, டாக்டர் ஜி.ஆர்.ரவீந்தரநாத், வே.மு.பொதியவெற்பன், விடுதலை ராஜேந்திரன், து.இரவிக்குமார், முத்து வாவாசி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சமூகம், பொருளாதாரம், அரசியல், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலை, வரலாறு என பல்வேறு தளங்களில் தங்களின் தனித்த முத்திரையை பதித்த பணியால் விருது பெரும் பெருந்தகையாளர் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
இந்த பட்டியலில் திரு.வி.க. விருதுக்கு தோழர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்தரநாத் தேர்வு செய்யப்பட்டதை அறிந்து, ''ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் - தன் மகனை சான்றோன் என கேட்ட தாயாக'' இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பெருமை பொங்க வாழ்த்துகிறது. பொது வாழ்வில் ஈடுபடுவோரை ஊக்குவித்து வரும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை வரவேற்று, நன்றி பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT