Published : 05 Jan 2025 03:50 PM
Last Updated : 05 Jan 2025 03:50 PM
சென்னை: பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார அலகு புதிய கட்டிடத்தினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 300 இடங்களில் பொது சுகாதார அலகு கட்டிடம் கட்டும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 150 இடங்களில் பொது சுகாதார அலகு கட்டிடம் தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டு உள்ளது.
பொது சுகாதார அலகு கட்டிடத்தைப் பொறுத்தவரை 67 வகையான மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்ள ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தைப் பொறுத்தவரை இப்பகுதி மக்களின் மருத்துவப் பரிசோதனைகளான காசநோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு பரிசோதனைகள் செய்வதற்கு பயனுள்ளதாக அமையும். இதுவரை 150 பொது சுகாதார அலகு கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள கொளக்காநத்தம் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடத்திற்கு சிறப்பு ஒன்று அமைந்துள்ளது.
காரணம் இப்பகுதி ஒன்றியக்குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி அவர் சார்ந்த ஊராட்சி நிதி ரூ.20 லட்சம் ஒதுக்கீடு தந்து இம்மருத்துவமனைக்கு பல்வேறு வசதிகளை செய்து தந்திருக்கிறார். ஏறத்தாழ ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடம் இன்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர் காலிப்பணியிடங்களை நிரப்பிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்குள் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களையும் சேர்த்து 2553 மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்று இத்துறைக்கு அறிவுறுத்தி அந்தவகையில் மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் இன்று (05.01.2025) தேர்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதிலும் 156 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
மருத்துவர் பணியிடத்திற்கு 23,917 பேர் விண்ணப்பத்திருக்கிறார்கள். தேர்வில் வெற்றி பெரும் தகுதியான மருத்துவர்களுக்கு விரைவில் பணிநியமனம் வழங்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர்கள் மொத்த பணியிடம் 86, தற்போது பணிபுரியும் மருத்துவர்கள் 54, எனவே காலியிடமாக உள்ள 32 மருத்துவர் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்.
இதயம் காப்போம் திட்டம்: தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்புக்குரிய திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவத்துறையின் மகத்தான திட்டங்களில் ஒன்றான இதயம் காப்போம் திட்டம் மிக பயனுள்ளதாக அமைந்துள்ளது. 2023 ஜூன் திங்கள் 7ம் தேதி கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியில் தொடங்கப்பட்ட இத்திட்டம் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என 10,000த்திற்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் Loading Doses என்று சொல்லக்கூடிய இருதய பாதுகாப்பு மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இதுவரை ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இருதயம் காப்போம் திட்டத்தின்மூலம் 13,673 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காப்பற்றப்பட்டிருக்கிறார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் 289 பேர் இத்திட்டத்தில் பயன்பெற்றிருக்கிறார்கள். கொளக்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டும் 23 பேர் பயன்பெற்றிருக்கிறார்கள். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் இன்னொரு கூடுதல் சிறப்பாக கீழப்புலியூர் பகுதியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மிக விரைவில் முதல்வரால் இந்த புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து வைக்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் மற்றொரு கோரிக்கை ஒரு மருத்துவக்கல்லூரி வேண்டும் என்பது. கருணாநிதி ஒரு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி அமைய நடவடிக்கை எடுத்தார். இந்த அரசு பொறுப்பேற்றபிறகு தமிழ்நாட்டில் இன்னும் புதிய 6 மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்டது. தற்போது 3 மருத்துவக்கல்லூரிகளாவது அமைப்பதற்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். விரைவில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து 3 புதிய மருத்துவக்கல்லூரி அமைய கோரிக்கை வைக்க உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT